தமிழ்நாடு

அதிமுகவிலிருந்து அன்வர் ராஜா நீக்கம்

JustinDurai
அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜாவை நீக்கி, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், ராமநாதபுரத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் கட்சியின் சிறுபான்மைப்பிரிவு நலச் செயலாளருமான அன்வர் ராஜா கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். அன்வர் ராஜா, கழகக் கட்டுப்பாட்டை மீறி கட்சி நடவடிக்கைகள் குறித்து கழகத் தலைமையின் முடிவுக்கு மாறான கருத்துகளை தெரிவித்து கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் வகையில் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாகவும் கூறியுள்ளனர்.
அதிமுக செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெறவிருக்கும் நிலையில் அன்வர் ராஜா நீக்கப்பட்டுள்ளார். எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோது அதில் இணைந்த அன்வர் ராஜா, 2001 ஆம் ஆண்டு ராமநாதபுரம் சட்டபேரவைத் தொகுதியில் வெற்றி பெற்று, ஜெயலலிதாவின் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தார். 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் வென்ற அன்வர் ராஜா, அதிமுகவின் சிறுபான்மைப் பிரிவு செயலாளராகவும் இருந்து வந்தார்.