இரட்டை இலை. எடப்பாடி பழனிசாமி pt web
தமிழ்நாடு

அதிமுக வழக்கு.. தனி நீதிபதி உத்தரவு ரத்து.. தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்!

அதிமுக இரட்டை இலை சின்னம் மற்றும் சட்ட விதிகள் திருத்தம் தொடர்பான இரண்டு முக்கிய வழக்குகள் மீது சென்னை மற்றும் டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது

PT WEB

அதிமுக இரட்டை இலை சின்னம் மற்றும் சட்ட விதிகள் திருத்தம் தொடர்பான இரண்டு முக்கிய வழக்குகள் மீது சென்னை மற்றும் டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது

அதிமுக கட்சி விதிகளில் செய்த திருத்தம், உட்கட்சித் தேர்தல் ஆகியவற்றை எதிர்த்து, உரிமையியல் வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி, ராம்குமார் ஆதித்தன், கே.சி.பழனிச்சாமியின் மகன் சுரேன் ஆகியோர், மனு தாக்கல் செய்தனர். அதை விசாரித்த நீதிபதி வேல்முருகன், வழக்கு தொடர அனுமதித்து உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, எடப்பாடி பழனிசாமி சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மனுவை, நீதிபதிகள் அனிதா சுமந்த், செந்தில்குமார் அமர்வு விசாரித்தது. அப்போது, சுரேன் மற்றும் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் அதிமுக உறுப்பினர்களே இல்லை என்று பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. அதிமுக உறுப்பினர்கள் தான் என ஆதாரங்களுடன் நிரூபித்த பிறகே, வழக்கு தொடர தனி நீதிபதி அனுமதித்ததாக, சுரேன், ராம்குமார் ஆதித்தன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சிவில் வழக்கு தொடர அனுமதி அளித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தனர்.

இரட்டை இலை. எடப்பாடி பழனிசாமி

அதே சமயம், அ.தி.மு.க இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுகளுக்கு பிறகும் விரைந்து முடிவெடுக்காத தேர்தல் ஆணையத்திற்கு எதிராக புகழேந்தி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிபதி அமீத் சர்மா அமர்விலான விசாரணையின் போது, நீதிமன்ற உத்தரவுகளை கண்டுகொள்ளாமல் தங்களது கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்து வருவதாகவும், அவர்கள் மீது அவமதிப்பு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டுமென புகழேந்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை 2026ம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.