நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுக்கு எத்தனை இடங்களை பகிர்ந்தளிப்பது என்பது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் பாஜக-வினரும் தனியாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அதிமுக - பாஜக இடையே இடப் பங்கீடு பேச்சுவார்த்தை நேற்று சுமார் 4 மணி நேரமாக நடைபெற்றது. ஆனால் எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. நாகர்கோவில், கோவை, திருப்பூர், ஓசூர் மாநகராட்சிகளில் 20 சதவீத இடங்களை பாஜக கேட்டதாக கூறப்படுகிறது. இரு கட்சிகளுக்கு இடையே 2வது நாளாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ள நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல், சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் 7 மாவட்ட பிரதிநிதிகளுடன் மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் ஆலோசனை நடத்தி வருகிறார். தனித்தனியாக இரண்டு கட்சிகளும் நடத்தி வரும் ஆலோசனைக்கு பிறகு, இரு கட்சிகளுக்கு இடையே 2வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: அதிக இடங்களை கேட்கும் பாஜக? வழங்க மறுக்கும் அதிமுக? - சூடுபிடிக்கும் பேச்சுவார்த்தை!