ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் - ஜனசேனா - பா.ஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, கொசு உற்பத்தியை தடுக்க ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஆந்திர அரசு திட்டமிட்டு உள்ளது.
கொசு உற்பத்தி அதிகம் உள்ள பகுதிகளை கண்காணிக்கவும், அதன் இனங்களை கண்டறியவும், சரியான நேரத்தில் பூச்சிக்கொல்லி தெளிப்பை செயல்படுத்தவும், கொசு கண்காணிப்பு அமைப்பு கட்டுப்பாட்டு ஸ்மார்ட் திட்டத்தை சோதனை முறையில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை ஆகியோர் இணைந்து நோய்க்கிருமிகளால் பரவும் நோய்களைத் ஆழமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கையாளும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதன்படி, 'ஸ்மார்ட் கொசு கட்டுப்பாடு' திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
செயற்கை நுண்ணறிவால் ( AI ) இயங்கும் இந்த ’ஸ்மார்ட் கொசு கண்காணிப்பு அமைப்பு (SMoSS)’ ஆந்திராவின் ஆறு முக்கிய நகராட்சிகளில் 66 இடங்களில் சோதனை அடிப்படையில் தொடங்கப்படவுள்ளது.
இந்த திட்டம் ட்ரோன்கள், சென்சார்கள், வெப்ப வரைபடங்கள் , இணைய பொருள்களின் உதவியுடன் நெருக்கமாக கணக்காணிக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, "கிரேட்டர் விசாகப்பட்டினம் மாநகராட்சியில் 16 இடங்களிலும், காக்கிநாடாவில் 4இடங்களிலும், ராஜமஹேந்திரவரத்தில் 5 இடங்களிலும், விஜயவாடாவில் 28 இடங்களிலும், நெல்லூரில் 7 இடங்களிலும், கர்னூலில் 6 இடங்களிலும் இந்த திட்டம் தொடங்கப்படவுள்ளது.” என்று நகராட்சி நிர்வாக இயக்குநர் பி. சம்பத் குமார் தெரிவித்துள்ளார் .