அக்னி நட்சத்திரம் இன்றுடன் விடைபெறும் நிலையில், தமிழகத்தில் இன்றும் நாளையும் அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடை வெயிலின் உச்சக்காலமான அக்னி நட்சத்திரம் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், தமிழகத்தில் இந்த ஆண்டில் முதல் முறையாக 17 இடங்களில் நேற்று வெயிலின் அளவு 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. மாநிலத்திலேயே அதிகபட்சமாக திருத்தணியில் 112 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதுதவிர வேலூர், திருச்சி, மதுரை, கரூரில் உள்ள பரமத்தி ஆகிய இடங்களில் வெப்பநிலை சதமடித்தது.
அதேபோல் பாளையங்கோட்டை, நாகை, கடலூர் உள்ளிட்ட இடங்களிலும் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டது. இதனிடையே வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
அதேநேரத்தில் உள் தமிழகத்தில் நான்கு முதல் ஆறு டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்றும், ஒருசில இடங்களில் இன்றும் நாளையும் அனல் காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.