தமிழ்நாடு

அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம்: வெயில் சுட்டெரிக்க வாய்ப்பு

அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம்: வெயில் சுட்டெரிக்க வாய்ப்பு

Rasus

அக்னி நட்சத்திர காலம் எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. இதனால் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்னி நட்சத்திரம்…. இந்த வார்த்தையை வானிலை ஆய்வு மையம் ஏற்பதில்லை என்றாலும் வானியல் சார்ந்த ஒரு விஷயமாகவே பார்க்கப்படுகிறது. ஜோதிட முறையிலும் முன்னோர்களின் வானியல் கணக்கின்படியும் அக்னி நட்சத்திர காலம் என்பது ஏற்கனவே கணக்கிடப்பட்ட ஒன்று. பஞ்சாங்க கணிப்பின்படி பரணி நட்சத்திரத்தில் இருந்து கிருத்திகை நட்சத்திரம் நோக்கி சூரியன் பயணிக்கும் காலம்தான் அக்னி நட்சத்திர காலம். இந்த ஆண்டின் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர காலம் இன்று தொடங்கி மே 28-ம் தேதி முடிவடைகிறது.

இந்த 24 நாட்களும் சூரியனின் கதிர்கள் நேரடியாக பூமி மீது விழுவதால் வெயில் கடுமையாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்களும் ஜோதிட நம்பிக்கை உள்ளவர்களும் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவை பொறுத்தவரை வட மாநிலங்களிலேயே இந்த காலகட்டத்தில் வெயில் அதிகமாக இருக்கும். இருப்பினும் கடந்த ஆண்டு தமிழகத்திலும் சில இடங்களில் வெயில் 110 டிகிரியை தாண்டியுள்ளது. இந்த ஆண்டு வழக்கத்தை விட வெயில் 1 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை  ஆய்வு மையமும் கூறியுள்ளது. இதனால் அடுத்து வரும் 24 நாட்களுக்கு தமிழக்ததில் வெயில் சுட்டெரிக்க வாய்ப்புள்ளது.