இரட்டை இலை சின்னத்தைப் பெற டி.டி.வி.தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், ஹவாலா ஏஜெண்ட் நரேஷ் என்பவர் டெல்லியில் இன்று கைது செய்யப்பட்டார்.
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி .தினகரன் முயன்றதாகவும் இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவருடன் ரூ.50 கோடி பேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து சுகேஷ் சந்திரசேகர் கடந்த 16-ம் தேதி இரவு டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். சுகேஷ் கொடுத்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து 3 பிரிவுகளில் டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து 25-ம் தேதி நள்ளிரவில் டிடிவி தினகரனை கைது செய்தனர். அவரது நண்பர் மல்லிகார்ஜுனா என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் பணம் எப்படி கைமாறியது என்கிற விவரத்தை அறிய தினகரனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னையில் இருந்து கொச்சி வழியாக, ரூ.10 கோடியை அனுப்பியதாக தகவல் கிடைத்தது. இதில் தொடர்புடையவராக கருதப்பட்ட ஹவாலா ஏஜென்ட் நரேஷ், தாய்லாந்தில் இருந்து இன்று டெல்லி வந்தார். அப்போது அவரை டெல்லி போலீசார் கைது செய்தனர். தினகரனுக்கும் நரேஷுக்கும் நேரடித் தொடர்பு உள்ளதா? எந்தெந்த வழிகளில் பணம் கொண்டு வரப்பட்டது என்பது குறித்து டெல்லி குற்றப்பிரிவு போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக மேலும் பலர் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.