தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி ஆயிரத்து 299 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டது. மே 3ஆம் தேதி கடைசி தேதி என்றும், ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பில், தற்போதைய ஆண்டின் ஜூலை ஒன்றாம் தேதியின்படி, 30 வயதுக்குள் இருக்க வேண்டும் என்று, வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் இந்தத் தேர்வுக்காக அறிவிப்பு வெளியிடப்பட்டும் நிர்வாக காரணங்களுக்காக தேர்வு நடத்தப்படவில்லை.
2 ஆண்டுகளாக காவல் உதவி ஆய்வாளர் பணிக்காக காத்திருந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள், அரசு குறிப்பிடும் வயது வரம்பை கடந்து விட்டனர்.
காவல் உதவி ஆய்வாளர் பணிக்காக பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் தனிப்பட்ட வகுப்புகள், பயிற்சி முகாம்கள், தேர்வு எழுதும் திறன் மேம்பாட்டு வகுப்புகள் என பங்கேற்று பெரும் நேரத்தையும் பணத்தையும் முதலீடு செய்துள்ளனர். இப்படியான சூழலில் வயது வரம்பு கடந்து விட்டதால், கனவு நனவாகாமல் போய் விடும் என வேதனை தெரிவிக்கின்றனர்.
பொதுவாக அரசு வேலைக்கான தேர்வுகளை நடத்துவதில் இடைவெளி ஏற்பட்டால், வயது வரம்பில் தளர்வு அளிப்பது நடைமுறையில் இருந்தது. அந்த வகையில், காவல்துறை பணி
கனவில், ஏற்கனவே செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு எஸ்.ஐ. தேர்வுக்காக தயாராகி வந்தவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
கிராமப்புற இளைஞர்களும் அரசுப் பள்ளியில் பயின்றவர்களும் தான் பாதிக்கப்படுவர். வயது தளர்வு மட்டுமே தங்களைப் போன்றோருக்கு தீர்வு என கூறுகிறார்கள் இவர்கள். துதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் செயலர், வரும் 22 ஆம் தேதிக்குள் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பதிலளிப்பார் என்று தெரிவித்தனர்.