சென்னை ஐஐடி கல்வி மையத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு பதிலாக சமஸ்கிருத பாடல் பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐஐடி மையத்தில், தேசிய துறைமுக நீர்வழிப்பாதை கடற்கரை தொழில்நுட்பத்துறையை உருவாக்குவது தொடர்பாக ஐஐடி கடல்சார் தொழில்நுட்பத்துறைக்கும், மத்திய கப்பல் போக்குவரத்து துறைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி தொடங்கும்போது, இரு மாணவர்களும், இரு மாணவியரும் சமஸ்கிருதத்தில் கணபதி பாடலை பாடினர். நிகழ்ச்சி முடிந்த பிறகு அதே மாணவர்கள் தேசிய கீதம் பாடினர். தமிழகத்தில் மத்திய அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக, சமஸ்கிருத பாடல் பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.