தமிழ்நாடு

காவேரி மருத்துவமனையில் குவியும் திமுக தொண்டர்கள்

காவேரி மருத்துவமனையில் குவியும் திமுக தொண்டர்கள்

rajakannan

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளநிலையில், மருத்துவமனையில் திமுக தொண்டர்கள் குவிய தொடங்கியுள்ளனர்.

கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் தொடர்ந்து 10ஆவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதியின் உடல்நலம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விசாரித்து வருகின்றனர். கடந்த 5 நாட்களுக்கு முன்பு கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், அன்றே அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து, கடந்த சில தினங்களாக எவ்வித அறிக்கையும் வெளியாகவில்லை. அதனால், கருணாநிதி விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்ற கருத்தும் நிலவியது. 

ஆனால், இன்று காலை முதலே திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் சற்றே பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தது. அதனால், கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனிடையே, காவேரி மருத்துவமனை வளாகத்தில் திமுக தொண்டர்கள் வரத் தொடங்கினர். 

இந்நிலையில் தான், இன்று மாலை 6.30 மணியளவில் கருணாநிதியின் உடல்நிலைக் குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், உறுப்புகளை ஒத்துழைக்க வைப்பதில் சவால் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை திமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், காவேரி மருத்துவமனை நோக்கி தொண்டர்கள் படையெடுத்தனர். தொண்டர்கள் மருத்துவமனை நோக்கி செல்வதால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. காவேரி மருத்துவமனை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, காவேரி மருத்துவமனைக்கு திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலத் தலைவர் முத்தரசன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.