தமிழ்நாடு

இயல்புக்கு திரும்பிய மாமல்லபுரம் ! இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

இயல்புக்கு திரும்பிய மாமல்லபுரம் ! இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

jagadeesh

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரத்தில் இரண்டு நாள்கள் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் சுற்றுலாப் பயணிகளுக்கு நேற்று வரை தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்த இரு தலைவர்களின் சந்திப்பு நேற்றுடன் முடிவடைந்ததால் சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று முதல் மாமல்லபுரத்தை பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்திப்பு வெள்ளிக்கிழமை அன்று மாமல்லபுரம் வந்தனர். அங்கு, தமிழகப் பாரம்பரிய உடையில் பிரதமர் மோடி சீன அதிபரை வரவேற்று பல்லவர்களின் சிற்பக்கலைகளான ஐந்து ரதம், கடற்கரை கோயில், அர்ஜுனன் தபசு உள்ளிட்டவற்றை நேரில் பார்வையிட்டனர். மேலும், இருநாட்டுத் தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து, கடற்கரை கோயில் வளாகத்தில் அமர்ந்து ஆலோசித்தனர்.

இரு தலைவர்களும் மாமல்லபுரம் வந்ததால், பாதுகாப்புக் காரணங்களுக்காக சுற்றுலாத் தல வளாகம் மற்றும் சுற்றுலாத் தலங்களைக் கண்டு ரசிக்க சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக கடந்த 8-ம் தேதி தொல்லியல்றை அறிவித்தது. இரு தலைவர்களும் மாமல்லபுரம் வந்து சென்றதால் பாதுகாப்பு கெடுபிடிகள் படிப்படியாக குறைக்கப்பட்டது.

இந்நிலையில் சுற்றுலாத் தலங்களான கடற்கரைக் கோயில், அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம், வெண்ணைய் உருண்டை பாறை உள்ளிட்ட கலைச் சின்னங்களை நேரில் ரசிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று அனுமதியளிக்கப்படுவதாக தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இதனால் மாமல்லபுரம் தனது இயல்பு நிலைக்கு மெல்ல திரும்பியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாமல் மூடப்பட்ட கடைகளும் இன்று முதல் வழக்கம்போல செயல்பட தொடங்கும் என்பதால் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்னர்.