தவெக தலைமையிலான கூட்டணி அரசில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் ஆதரவு வழங்கி ஆட்சியில் பங்கெடுத்துள்ளன. 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸுக்கு அமைச்சர்பதவி கிடைத்திருப்பது பெருமை என மாணிக்கம் தாகூர் கூறி, திமுக-அதிமுக கூட்டணிகளில் அதிகாரம் தரப்படாத பழைய முறைமையை விஜய் மாற்றியுள்ளார் என்றும், விசிக, முஸ்லிம் லீக்குக்கும் அதிகாரம் பகிர வேண்டும் என்பது ஜனநாயகத்தின் அடிப்படை என வலியுறுத்தினார்.
தமிழக சட்டபேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவானபோதும் ஆட்சிமையக்க போதிய பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆதரவுடன் ஆட்சியமைத்திருக்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் மே 10-ஆம் தேதி தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். அவர்களுக்கு இலாகாவும் ஒதுக்கப்பட்டது.
எனினும், மேற்கொண்டு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமலேயே இருந்துவந்த நிலையில், 21ஆம் தேதியான இன்று தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவை விரிவாக்க நிகழ்வில் தவெகவிற்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர்.
இன்று மொத்தம் 23 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்ற நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். தவெக அரசில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் அமைச்சர்களான விஸ்வநாதனுக்கு உயர்கல்வித்துறையும், ராஜேஷ் குமாருக்கு சுற்றுலாத்துறையும் என முக்கிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1952-க்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் கூட்டணி ஆட்சி மீள்தொடக்கம் பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 59 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் அதிகாரம் பெற்றிருக்கும் நிலையில், அது மனதிற்கு நிறைவு தருவதாக காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், “சட்டசபையில் மக்களுக்கான பிரச்னைகளை சரிசெய்ய வேண்டும் என்று குரலெழுப்பிய காங்கிரஸ், தற்போது பிரச்னையை சரிசெய்யும் இடத்திற்கு சென்றுள்ளது. இது மிக முக்கியமான ஒரு உயர்வு. 59 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியிலிருந்து 2 அமைச்சர்கள் பொறுப்பேற்றுள்ளது நிறைவை தருகிறது.
திமுக, அதிமுக இரண்டு கட்சிகளின் கூட்டணியிலும் காங்கிரஸ் இடம்பெற்றிருந்தது, ஆனால் அதிகாரம் கிடைக்கவில்லை. ஆனால் அந்த பழைய மாடலை திரு விஜய் அவர்கள் மாற்றியிருக்கிறார். எங்களை பொறுத்தவரை அமைச்சரவையில் விசிக மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளும் இடம்பெறவேண்டும், அவர்களுக்கும் அதிகாரம் கிடைக்கவேண்டும். அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்பது ஜனநாயகத்தின் முக்கிய பங்கு” என்று பேசியுள்ளார்.