மேட்டூர் அணையின் நீர்மட்டம் பகல் 12 மணி அளவில் முழு கொள்ளளவை எட்டும் என அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில் அதற்கு முன்னதாகவே அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளில் இருந்து காவிரிக்கு 66 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்துகொண்டுள்ளது. மேட்டூர் அணைக்கு அதிகப்படியான நீர்வரத்தால் சேலம் மாவட்டக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் பகல் 12 மணி அளவில் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்திருந்தனர். ஆனால் அதற்கு முன்னதாகவே மேட்டூர் அணை தன் கொள்ளளவை எட்டியுள்ளது. 5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டுவது குறிப்பிடத்தக்கது. இதனால் 16 கண் மதகுகளில் திறக்கப்படும் நீரின் அளவு 8,000 கன அடியில் இருந்து 10,000 கன அடியாக உயர்த்தப்படும் என தெரிகிறது.
மேட்டூர் அணை நிரம்பியுள்ள நிலையில் முதலமைச்சர் பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதால் பேரிடர் மேலாண்மை குறித்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தியுள்ளார்.