வெங்காய விலை அதிகரித்து வரும் நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து மதுரைக்கு 35 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் உள்ள பரவை மொத்த காய்கறி சந்தை, நெல்பேட்டை வெங்காய மண்டி மற்றும் மாட்டுதாவணி சென்ட்ரல் காய்கறி சந்தை ஆகிய 3 சந்தைகளுக்கும் நாள்தோறும் 600 முதல் 700 டன் வரை வெங்காயம் வரத்து இருந்து வந்த நிலையில் பல்வேறு மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக வெங்காய வரத்து சரி பாதிக்கும் அதிகமாக குறைந்துள்ளது. தற்போது தினசரி 250 டன் வெங்காயம் மட்டுமே வருவதால் வெங்காய விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மதுரை சென்ட்ரல் காய்கறி சந்தைக்கு முதல் கட்டமாக ஆப்கானிஸ்தானிலிருந்து 35 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் வெங்காயம் மொத்த விற்பனையில் 70 ரூபாய்க்கும் சில்லறை விற்பனையில் 75 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாட்டு வெங்காயம் போன்ற தரத்தில் ஆப்கானிஸ்தான் வெங்காயம் இருப்பதால் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
வழக்கமாக விற்பனையாகும் பெரிய வெங்காயம் மொத்த விற்பனையில் 50 முதல் 80 ரூபாய்க்கும் சில்லறை விற்பனையில் 60 முதல் 95 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. சின்ன வெங்காயம் மொத்த விற்பனையில் 90 ரூபாய் முதல் 100 ரூபாய்க்கும் சில்லறை விற்பனையில் 100 ரூபாய் முதல் 120 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.