ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பாஜகவினர், பொது இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர்.
7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிட்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் முதுகுளத்தூர், சடையனேரியில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருக்கிறது. மேலும் வரும் சட்டமன்றத் தேர்தலில் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில், பாஜக கட்சிக்கு தாமரை சின்னத்தில் வாக்களிப்பீர் என்ற வாசகங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வைக்கப்பட்டிருப்பது அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகளிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக கடந்த வாரம் திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு இடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பாண்டிக்கு கை சின்னத்தில் வாக்களிக்குமாறு காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் முதுகுளத்தூர் தொகுதி முழுவதும் நோட்டீஸ் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இந்நிலையில், தற்போது பாஜக, அதிமுக கூட்டணியில் மீண்டும் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.