தமிழ்நாடு

பொதிகையில் சமஸ்கிருத செய்தி: உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு

webteam

பொதிகை தொலைக்காட்சியில் தினமும் 15 நிமிடங்களை சமஸ்கிருத செய்தி அறிக்கைக்கு ஒதுக்கக்கோரிய ஆணையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையிடப்பட்டுள்ளது

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கண்ணன், நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக இந்த முறையீட்டை முன்வைத்தார். முறையீட்டில்,"

பிரசார் பாரதியின் கீழ் இயங்கும் பொதிகை உள்ளிட்ட அனைத்து தொலைக்காட்சிகளும் தினமும் 15 நிமிடங்களை சமஸ்கிருத செய்தி அறிக்கைக்கு ஒதுக்க வேண்டும் எனவும், வாராவாரம் சனிக்கிழமை 15 நிமிடங்களை வாராந்திர செய்தித்தொகுப்பிற்கு ஒதுக்கவேண்டுமெனவும் ஆணை பிறப்பித்துள்ளது.

தமிழ்மொழி நிகழ்ச்சிகளுக்காக தொடங்கப்பட்ட பொதிகை தொலைக்காட்சியில் இதுவரை வேறுமொழிச் செய்திகள் எதுவும் இடம்பெற்றிராத நிலையில் தமிழர்களின் பண்பாட்டு வாழ்விற்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாத சமஸ்கிருத செய்தியறிக்கையை ஏற்கமுடியாது. ஆகவே, சமஸ்கிருத செய்தி அறிக்கை, சமஸ்கிருத வாராந்திர செய்தித்தொகுப்பு குறித்த ஆணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார்.

அதற்கு பதிலளித்த நீதிபதிகள், நீங்கள் விரும்பவில்லை எனில் செய்திகளைப் பார்க்காமல் இருக்கலாமே? என கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பில் ஒவ்வொரு மொழிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் அடிப்படையில் தமிழ் மொழிக்கென பொதிகைத் தொலைக்காட்சி உருவாக்கப்பட்டது. அதில் சமஸ்கிருத செய்தி அறிக்கை என்பதை ஏற்க இயலாது" என தெரிவித்தார். அதையடுத்து நீதிபதிகள், இதனை மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.