ஆளுநர் வித்யாசாகர் ராவின் வசதிகேற்ற நாளில் தமிழக முதலமைச்சராக அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பதவியேற்பார் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் சட்டமன்ற கட்சித் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், முதலமைச்சராகப் பதவியேற்பது எப்போது என்ற குழப்பம் நிலவிவருகிறது. சசிகலா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பினை உச்சநீதிமன்றம் அளித்த பின்னரே சசிகலாவின் பதவியேற்பு விழா நடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, தமிழக முதலமைச்சராக சசிகலா இன்று பதவியேற்பார் என்று கூறப்பட்ட நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை திரும்பாததால் பதவியேற்பு விழா தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில், சசிகலா பதவியேற்பில் தாமதம் ஏற்பட காரணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் பொதுச்செயலாளர் பொன்னையன், தாமதத்தில் அரசியல் இல்லை என்று தெரிவித்தார். மேலும், ஆளுநரின் வசதிக்கேற்ற ஒரு நாளில் தமிழகத்தின் முதலமைச்சராக சசிகலா பதவியேற்பார் என்றும் பொன்னையன் தெரிவித்தார். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் கொள்கைகளைத் திறம்பட செயல்படுத்தக்கூடியவர் சசிகலா என்றும் பொன்னையன் கூறினார். சசிகலாவுக்கு போதிய அரசியல் ஞானம் உள்ளது என்றும், ஜெயலலிதாவும் சசிகலாவும் ஒன்றுதான் எனவும் பொன்னையன் குறிப்பிட்டார்.