தமிழ்நாடு

கமல், ரஜினி மீது கடும் தாக்கு ! நமது அம்மாவில் கவிதை

கமல், ரஜினி மீது கடும் தாக்கு ! நமது அம்மாவில் கவிதை

webteam

ஜெயலலிதா இல்லாத காரணத்தால் நடிகர்கள் கட்சி தொடங்குகின்றனர் என்றும், திரைப்பட இயக்குநர்கள் தமிழினப் போராளிகளாக வேஷம் கட்டுகின்றனர் என்றும் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா கடுமையாக விமர்சித்துள்ளது.

நமது அம்மா நாளிதழ் "ஏக்கத்தில் தமிழகம்" என்ற பெயரில் வெளியிட்டுள்ள கவிதையில், ஜெ ஜெயலலிதா எனும் ஒற்றைக்குரல் மீண்டும் ஒலிக்காது என்பதால், நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று கூறியவருக்கு மையம் தொடங்கும் மன தைரியம் வருகிறது என்றும், உச்ச நட்சத்திர நடிகருக்கும் கட்சி தொடங்கும் உத்வேகம் பிறக்கிறது எனவும் விமர்சிக்கப்பட்டுள்ளது. அமீர், பாலா, கரு.பழனியப்பன், கவுதமன் என பட வாய்ப்பு இல்லாத இயக்குநர் எல்லாம் தாடிவிட்டு தமிழினப் போராளி வேஷம் கட்டும் வேடிக்கை பிறக்கிறது என்று நமது அம்மா நாளிதழ் கூறியுள்ளது.

பாரதிராஜா, பார்த்திபன் பத்து நாட்களுக்கு ஒரு முறை பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துகின்றனர் என்றும், டிராபிக் ராமசாமி எனும் பெயரில் சினிமா எடுக்கும் ஆசை எஸ்.ஏ.சந்திரசேகருக்கு ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாட்டு எல்லைக்குள் தலைகாட்ட அஞ்சி நடுங்கி பாண்டிச்சேரி பக்கம் பதுங்கி கிடந்தவர்கள், இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து நிற்கிற இறுமாப்புடன் உள்ளதாக நமது அம்மா நாளிதழ் தெரிவித்துள்ளது. எனவே, வங்கத்து கடலோரம் துயில் கொண்ட தங்கத்தாரகையே இந்தக் கோமாளி கொட்டங்களை அடக்க, ஒரு நாள் கோட்டைக்கு வந்து போகக்கூடாதா என்ற ஏக்கத்தில் தமிழகம் இருக்கிறது என்றும் அதிமுகவின் நாளிதழான நமது அம்மாவில் எழுதப்பட்டுள்ளது.