தமிழ்நாடு

ஓட்டுநராக மாறிய மகள்.. உதவிக்கரமாக இருப்பதாக பெருமைப்படும் எம்.எல்.ஏ

ஓட்டுநராக மாறிய மகள்.. உதவிக்கரமாக இருப்பதாக பெருமைப்படும் எம்.எல்.ஏ

PT

பொது முடக்கம் காரணமாக சட்டமன்ற உறுப்பினரின் கார் ஓட்டுநர் பணிக்கு வராததால், சட்டமன்ற உறுப்பினரின் மகளே கார் ஓட்டுநராக மாறியுள்ளார். 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி வருபவர் விஜயகுமார். மஞ்சாங்கரணை என்ற பகுதியில் வசித்து வரும் இவர் பொது முடக்க காலத்தில் தொகுதி மக்களுக்கு நல திட்ட உதவிகள் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வந்தார். பொது முடக்கத்தின் காரணமாக பேருந்து வசதி முடக்கப்பட்டதால் விஜயகுமாரின் கார் ஓட்டுநரால் தொடர்ந்து பணிக்கு வர முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

கார் ஓட்டுநர் பணிக்கு வராததால் விஜய் குமாருக்கு தொகுதி பணிகளைச் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்த விஜயகுமாரின் இளையமகள் சஞ்சனா, விஜயகுமாரின் கார் ஓட்டுநராக மாறியுள்ளார். சட்ட கல்லூரியில் 2-ஆம் ஆண்டு பயின்று வரும் இவர் தினமும் தந்தையுடன் கிளம்பிச் சென்று விஜய்குமாரின் அனைத்து வேலைகளுக்கும் உதவிக்கரமாக இருந்து வருகிறார்.

இது குறித்து சஞ்சனா கூறும் போது “ பேருந்து வசதியில்லாததால் எங்களது கார் ஓட்டுநரால் பணிக்கு வர இயலவில்லை. அதன் காரணமாகத்தான் அப்பாவுக்கு நானே கார் ஓட்டுனராக மாறினேன். எனக்கும் வரும் காலத்தில் அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் இருக்கிறது. நான் ஒரு சட்டக்கல்லூரி மாணவியாக இருந்த போதும் எனக்கு கல்லூரியில் கிடைத்த அனுபவங்களை விட, மக்களிடையே செல்லும் போது அங்கு கிடைக்கும் அனுபவங்களில் இருந்து இன்னும் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிகிறது என்றார்.

இது குறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜய்குமார் கூறும் போது “ மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை கொண்டு செல்வதற்கு எனது மகளின் உதவி பெருந்துணையாக இருக்கிறது” என்றார்.