ஜெயலலிதாவின் கார் டிரைவர் உயிரிழந்த சம்பவம் குறித்த விசாரணைக்கு ஆஜராகும் படி, ஆறுகுட்டி எம்.எல்.ஏவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட, ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்த கனகராஜ் விபத்தில் பலியானார். அவர் விபத்தில் இறப்பதற்கு முன், கவுண்டாம்பாளையம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ஆறுகுட்டிக்கு 4 முறை செல்ஃபோனில் அழைத்திருந்ததாகத் தகவல்கள் தெரிய வந்தது.
இது குறித்து விசாரிக்க, நாளை காலை 10 மணிக்கு ஆத்தூர் காவல் நிலையத்தில் ஆஜராகும்படி ஆறுகுட்டி எம்.எல்.ஏவுக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. இவர், தற்போது ஓ.பி.எஸ் அணியில் இருக்கிறார். இவருக்கும் ஜெயலலிதா கார் டிரைவருக்கும் என்ன தொடர்பு என்பது மர்மமாக உள்ளது.
ஜனகராஜின் அண்ணன் தனபாலிடம் கோத்தகிரி போலீசார் நேற்று நடத்திய விசாரணையில், தனது தம்பி சாவில் மர்மம் உள்ளதாக அவர் கூறியிருந்தார். இந்நிலையில் ஆறுகுட்டி எம்.எல்.ஏவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை வந்தால் ஓட்டுநர் கனகராஜ், காரில் அழைத்துச்செல்வார் என்றும் அந்த வகையில்தான் அவருடன் தொடர்பிருந்ததாகவும் எம்எல்ஏ ஆறுக்குட்டி விளக்கமளித்துள்ளார்.