தமிழ்நாடு

நெருங்கும் சட்டமன்றத் தேர்தல் - அதிமுக தீவிர ஆலோசனை

webteam

சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி அதிமுக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்றத்தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். வரும் ஜனவரி 5 ஆம் தேதிமுதல் எதிர்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான ஸ்டாலின் தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளார். 1500 கூட்டங்களை நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. அதற்கான முதற்கட்ட ஆயத்தப்பணிகளை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி விட்டார்.

இந்நிலையில், அதிமுகவும் தேர்தல் குறித்து ஆலோசனைக் கூட்டத்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், அதிமுக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் ஆகியோர் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள், பூத் கமிட்டிகள், உள்ளிட்ட முக்கிய பணிகள் குறித்து ஆலோசனை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வரவுள்ள நிலையில் அதிமுகவின் இந்த ஆலோசனைக்கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.