தமிழ்நாடு

" `ஜெயலலிதா போல நானும் ஒரு தலைவர்’ என கூறாதீர்கள்"- அண்ணாமலையை சாடிய ஜெயக்குமார்

webteam

“எடப்பாடி பழனிச்சாமி உருவபொம்மையை எரித்தவர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். அதிமுக தொண்டர்கள் கொதித்தெழுந்தால், யாராலும் கட்டுப்படுத்த முடியாது” என பேசியுள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மகளிர் தின விழா கொண்டாட தகுதி உள்ள ஒரே கட்சி அதிமுகதான். ஏனெனில் மகளிருக்கான திட்டங்களை கொண்டுவந்தவர் ஜெயலலிதா மட்டுமே. அந்த திட்டங்களையெல்லாம் தற்போது திமுக நிறுத்தி வருகிறது. கற்களை வீசினால் உடைவதற்கு, அதிமுக என்பது கண்ணாடி இல்லை. அதிமுக என்பது ஒரு சமுத்திரம். அதில் கற்களை வீசினால் கற்கள் மட்டுமே காணாமல் செல்லும்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் எழுச்சி ஏற்பட்டுள்ளதால், திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளில் இருந்தும் விருப்பப்பட்டு பலரும் இங்கு வந்து சேர்கின்றனர். அதனை ஏற்றுகொள்ள வேண்டிய பக்குவம் அரசியல் கட்சி தலைவர்களுக்கு இருக்க வேண்டும். அது அண்ணமலைக்கும் இருக்க வேண்டும். அசுர வேகத்தில் கட்சி (அதிமுக) வளர்வதால் அனைவரும் வந்து சேர்கின்றனர். இதில் அரசியல் காழ்புணர்ச்சி இருக்க கூடாது” என்றார்.

தொடர்ந்து வைத்தியலிங்கம் அறிக்கை குறித்து பேசுகையில், “அதில் கூறப்பட்டு உள்ள அனைத்தும் பொய். என்னை அமைச்சராக உருவாக்கியவர் ஜெயலலிதாதான். என் மகனை எம்.பி ஆக்கியவுடன் என் அரசியல் வாழக்கை முடிந்தது என கூறினார்கள். இருப்பினும் மீண்டும் எனக்கு அமைச்சர் பதவியை ஜெயலலிதா வழங்கினார். இதுதெரியாமல் அவர் பேசுகிறார். அரசியல் ரீதியாக பேச வேண்டும் என்றால், அரசியல் ரீதியாக மட்டும் பேச வேண்டும். வைத்தியலிங்கம் என்னுடைய நல்ல நண்பர். ஆனால் அவர் இன்று இப்படி மாறியுள்ளார். வஞ்சத்தில் வீழ்ந்துள்ளார் அவர்” என்றார்.

பாஜக-வினர் இபிஎஸ்-ன் உருவபொம்மையை எரித்தது குறித்து பேசுகையில், “பாஜகவினர் செய்யும் செயல்களை அக்கட்சியின் தலைவர் தடுக்க வேண்டும். இதனையே அதிமுக தொண்டர்களும் செய்ய கிளம்பினால், என்ன ஆகும்? எங்கள் கட்சியில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்கள் கொதித்தெழுந்தால் என்ன ஆகும்? எனவே அவர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.

அண்ணாமலை எப்படி தலைவர் ஆனார் என்பதற்குள் செல்ல நான் விரும்பவில்லை. ஆனால் ஜெயலலிதா போல நான் ஒரு தலைவர் என கூறாதீர்கள். அப்படி ஒரு தலைவர் இந்தியாவில் பிறக்கப்போவதே இல்லை. செஞ்சி கோட்டை ஏறுபவரெல்லாம், ராஜா தேசிங் இல்லை. மீசை வைப்பவர் எல்லாம் கட்டபொம்மன் இல்லை. இதிலிருந்து புரிந்துகொள்ள வேண்டும்.

தொண்டர்களிடம் வெவ்வேறு உணர்ச்சிகள் இருக்கலாம். ஆனால் தலைவர்கள் அதனை கட்டுபடுத்த வேண்டும். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டணியை பொறுத்தவரை 2024 வரை அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மற்றவர்கள் எல்லாம், அனுபவம் இல்லாமல் பேசுகின்றனர். அதிமுக மீது அட்ரஸ் இல்லாமல் பேசும் நபர்களுக்கு கருத்து தெரிவிக்க நான் விரும்பவில்லை” என தெரிவித்தார்.