தமிழ்நாடு

12ஆம் தேதி முக்கிய ஆலோசனைக் கூட்டம் - அதிமுக அறிவிப்பு

12ஆம் தேதி முக்கிய ஆலோசனைக் கூட்டம் - அதிமுக அறிவிப்பு

webteam

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என எம்எல்ஏக்கள் சிலர் கருத்து கூறி வரும் நிலையில், வருகிற 12-ஆம் தேதி முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

ஒற்றை காம்பில் இரட்டை இலை இருப்பது போல், ஒற்றை தலைமையின் கீழ் அதிமுகவும் செயல்பட வேண்டும் என மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா போர்க்கொடி தூக்கினார். அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அதிமுகவில் இரட்டை தலைமையின் ஈகோ பிரச்னையால்தான் மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கவில்லை என குன்னம் தொகுதி எம்எல்ஏ ராமச்சந்திரனும் கருத்து தெரிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வருகிற 12-ஆம் தேதி முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது. அதன்படி அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் வருகின்ற 12ஆம் தேதி காலை 10 மணிக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், செய்தித் தொடர்பாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். தனித்தனியே அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழோடு கூட்டத்தில் கலந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ‌ 

மக்களவைத் தேர்தல் தோல்வி, கட்சித் தலைமை விவகாரம் உள்ளிட்டவை குறித்தும், பொதுக்குழுவைக் கூட்டுவது குறித்தும் அப்போது ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.