செங்கோட்டையனின் தீடீர் டெல்லி பயணம் pt
தமிழ்நாடு

செங்கோட்டையன் தீடீர் டெல்லி பயணம்... யாரை சந்தித்தார்.. என்ன நடக்கிறது அதிமுகவில்?

பரப்பரப்பான அரசியல் சூழலுக்கிடையே அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டிருக்கிறார். யாரை சந்தித்தார்.. பார்க்க லாம்!

ஜெனிட்டா ரோஸ்லின்

சமீபத்தில் எதிர்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி டெல்லி பயணம் மேற்கொண்டிருந்தார். டெல்லியில் உள்ள அதிமுக அலுவலகத்திற்கு சென்ற அவர் பின்னர் மத்திய அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்தார். இந்த சந்திப்பில், அதிமுக மூத்த தலைவர்கள் முனுசாமி, தம்பிதுரை, வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 2 மணி நேரத்திற்கு மேல் நீடித்த இந்தசந்திப்பிற்கிடையில், அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி இருவர் மட்டும் தனியாக நீண்ட நேரம் பேசியதாக தகவல்கள் கிடைத்தன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமியிடம் கூட்டணிக்குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா என்று கேள்வி எழுப்பப்பட்டநிலையில், கூட்டணி என்று எதுவும் கிடையாது என்றும், தமிழகத்தின் பிரச்னைதான் பேசப்பட்டதாக தெரிவித்த அவர், ’கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறும்’ என்று சூசகமாகவும் பதிலளித்து சென்றார்.

ஆனால், நேற்றைய தினம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், அதிகவுடனான கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், சரியான நேரத்தில் அதை தெரிவிப்போம் என்றும் பேசியுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 14 மாதங்களே இருக்கும் பட்சத்தில், அதிமுக மீண்டும் பாஜக கூட்டணிக்கு திரும்புவதற்கான அறிகுறிகள் தெரிவதாக கூறப்பட்ட நேரத்தில் இந்த நகர்வுகள் அதை மேலும் , சந்தேகத்தை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

பரபரப்பான அரசியல் களம்... டெல்லி சென்ற செங்கோட்டையன்!

இப்படி பரப்பாக அரசியல் களம் நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஏற்கெனவே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இடையே கருத்து வேறுபாடு எழுதுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தன. இதனை உறுதிப்படுத்தும் விதமாக, எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சிகளில் செங்கோட்டையன் பங்கேற்காமலும், அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்திலும் பங்கேற்காமலும் தவிர்த்தார்.

முன்னதாக, இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ’செங்கோட்டையன் ஏன் பேசவில்லை என்று அவரிடமே கேளுங்கள்’ என்று பதில் அளித்து அதிர்ச்சி கொடுத்தார். இதன் மூலமாக எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன் இடையில் மோதல் இருக்குமா ? என்ற சந்தேகமும் எழுந்தது. ஆனால், இந்த மோதல் போக்கு முடிவுக்கு வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில்தான், செங்கோட்டையனின் இந்த தீடீர் டெல்லி பயணம் அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி சென்ற அவர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இப்படியான சூழலில் , அதிமுகவில் என்னதான் நடக்கிறது? என்ற குழப்பை அரசியல் களத்தில் எழுந்துள்ளது.