சென்னை கோட்டையில் நடந்த 80வது சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் விஜய் மக்கள் தான் ஆட்சியாளர்கள், நாங்கள் சேவகர்கள் என்று உரையாற்றியதை தொடர்ந்து, தவெக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சரியில்லை, தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் கூட இடம் பெறவில்லை என்று ஆர்.பி. உதயகுமார் கடுமையாக விமர்சிக்கிறார். மதுரை கொலை நகரமாக மாறியதாகவும், போதைப் பொருள் காரணமாக கொலைகள் அதிகரித்ததாகவும் குற்றம் சாட்டுகிறார்.
இந்திய நாட்டின் 80-வது சுதந்திர தின விழா, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துக் கொண்ட முதலமைச்சர் விஜய், தேசியக் கொடியை ஏற்றி வைத்த பிறகு, மக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது, பேசிய அவர், வாக்கு செலுத்தி, தன்னை முதலமைச்சர் ஆக்கியதோடு கடமை முடிந்துவிட்டது என ஒதுங்கிவிடாதீர்கள் என்றும், நீங்கள் தான் ஆட்சியாளர்கள். நாங்கள் அனைவரும் உங்களது சேவகர்கள் தான் என்றும், கூறியிருந்தார்.
முதலமைச்சர் விஜயின் இந்த பேச்சை விமர்சிக்கும் வகையில், ஆர்.பி.உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அரசிடம் இருந்து மக்கள் விலகத் தொடங்கிவிட்டார்கள் என்பது, முதலமைச்சரின் சுதந்திர தின பேச்சில் இருந்தே அறிய முடிகிறது என்றும், தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களை, பட்ஜெட்டில் கூட அறிவிக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறார்கள் என்றும் விமர்சித்தார்.
மேலும், கோவில் நகரமாக இருந்த மதுரை கொலை நகரமாக மாறியதாகவும், சென்னையிலும், கோவையிலும் போதைப் பொருள் பழக்கத்தால் படுகொலை சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வருவதாகவும் கூறிய அவர், தவெக ஆட்சியில் சட்டஒழுங்கு சரியாக இல்லை என்றும் விமர்சித்தார்.
தொடர்ந்து, சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷா பங்கேற்றது குறித்து விமர்சித்த ஆர்.பி.உதயகுமார், இது தாய் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட சாபக்கேடு என்றும் தெரிவித்தார். மேலும், நடிகை த்ரிஷாவை துணை முதலமைச்சராக்கி அரியணையில் அமர வைப்பாரா என்றும் கேள்வி எழுப்பினார்.
மொத்தத்திலே தவெக அரசு தடுமாறி நிற்கிறது என்பது மட்டும் நமக்கு புரிகிறது. அதனால்தான் “மக்களே, என்னை விட்டு விலகி விடாதீர்கள்” என்று முதலமைச்சர் விஜய் கெஞ்சத் தொடங்கி இருக்கிறார் என அந்த வீடியோவில், அவர் பேசி முடித்தார்.
முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்.எல்.ஏ மார்கண்டேயன், திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், நயினார் நாகேந்திரன் ஆகியோர் வரிசையில், தற்போது ஆர்.பி.உதயகுமாரும் இணைந்திருக்கிறார்.
அடுத்தடுத்து முதலமைச்சர் விஜய் மீது விமர்சனங்கள் முன்வைக்கும்போது, ஊடக வெளிச்சம் விழும் என்ற காரணத்திற்காக, இவ்வாறு பேசுகிறார்களா? அல்லது இது அவர்களது நேர்மையான விமர்சனமா? என்று, நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.