தமிழ்நாடு

சாலையின் நடுவில் துளைபோட்டு கொடி கம்பத்தை நாட்டிய அதிமுக: விபத்து பயத்தில் பொதுமக்கள்..!

Rasus

காஞ்சிபுரம் நகர் பகுதியில் அனுமதியின்றி அதிமுகவினர் கட்சி கொடிகளை சாலையின் நடுவில் துளையிட்டு நட்டு வைத்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

காஞ்சிபுரத்திலும் அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. இதனையொட்டி காஞ்சிபுரம் நகர் பகுதியில் எந்தவொரு அனுமதியும் பெறாமல் அதிமுகவினர் கட்சி கொடிகளை சாலையின் நடுவில் துளையிட்டு நட்டு வைத்துள்ளனர். காஞ்சிபுரம் பச்சயப்பன் சாலை, காந்தி ரோடு, பேருந்து நிலையம், நகராட்சி அலுவலகம் என பல பகுதிகளில் அனுமதியின்றி சாலையில் கொடி நடப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர். கொடியை நடுவதற்காக சாலையில் இயந்திரம் கொண்டு துளையிடப்பட்டுள்ளதால் சுமார் 5 கி.மீ வரை சாலையில் சேதமும் ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.