annamalai, eps pt web
தமிழ்நாடு

எந்த காலத்திலும் கூட்டணிக்காக அதிமுக தவம் இருந்ததில்லை – அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி பதில்

அதிமுக தொடங்கிய நாள் முதல் இதுவரை யாருக்காகவும் எந்த காலத்திலும் கூட்டணிக்காக தவம் இருந்ததில்லை. அதிமுக மீது அவதூறு பரப்ப வேண்டாம் என பாஜக தலைவர் அண்ணாமலை கருத்துக்கு இபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

PT WEB

செய்தியாளர்: ஸ்டாலின்

சென்னை இராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மகளிர் அணியின் சார்பில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது இதில், அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கேக் வெட்டி மகளிர்களுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து மகளிர் நலம் காக்க மாற்றம் வேண்டும் என்ற மகளிர் தின கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மகளிர் திட்டங்கள்:

இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர்... விலையில்லா நாப்கின் வழங்கும் திட்டம், மானிய விலையில் இருசக்கர வாகனம், அம்மா குழந்தைகள் நலம் காக்கும் பெட்டகம், ஏழை குடும்பத்தில் இருக்கும் பெண்கள் பொருளாதார சூழல் காரணமாக தாலிக்கு தங்கம், திருமண உதவித்திட்டம் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டன. கிராமப்புறத்தில் பெண்கள் பொருளாதாரம் ஏற்றம் அடைய மகளிர் சுய உதவிக் குழு, விலையில்லா கறவை மாடுகள் ஆடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பாதுகாப்பான விடுதிகள் என பெண்களுக்கான ஏராளமான திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டன. தற்போதுள்ள திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் இருக்கிறது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் பெண்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

cm stalin

எந்த காலத்திலும் கூட்டணிக்காக தவம் இருந்ததில்லை:

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி... பாஜகவுடன் கூட்டணி சேர்வதற்கு அதிமுக தவம் கிடப்பதாக பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்து குறித்து பேசிய அவர், கட்சி தொடங்கிய நாள் முதல் இதுவரை அதிமுக யாருக்காகவும் எந்த காலத்திலும் கூட்டணிக்காக தவம் இருந்ததில்லை. அதிமுக மீது அவதூறு பரப்ப வேண்டாம். கூட்டணி குறித்து 6 மாதத்திற்கு பின்னர் தான் பேசப்படும், தற்பொழுது எதுவும் அறிவிக்கப்படமாட்டாது என்று கூறினார்.