தமிழ்நாடு

அதிமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் ; திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் - இன்று

அதிமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் ; திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் - இன்று

webteam

மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

மக்களவைத் தேர்தலுக்கு ஆயத்தமாகி வரும் அதிமுக, ஏற்கெனவே விருப்பமனுக்கள் விநியோகத்தை தொடங்கிவிட்டது. இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான அடுத்தகட்ட ஆயத்தப் பணிகள் குறித்து விவாதிக்க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாலை 4.30 மணிக்கு இந்த கூட்டம் தொடங்குகிறது. அப்போது கூட்டணி குறித்தும், தொகுதிப் பங்கீடு பற்றியும், மாவட்டச் செயலாளர்களிடம் கருத்து கேட்கப்படும் எனத்தெரிகிறது. மேலும் பகுதி மற்றும் வார்டு வாரியாக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளன.

மற்றொரு புறம், சென்னையில் இன்று மாலை திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. மாலை 5 மணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. அதேவேளையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. இந்த சூழலில் நடக்கும் திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பட்ஜெட் தொடர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.