செய்தியாளர்: V.M.சுப்பையா
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்தது உள்ளிட்ட அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கக் கூடாது எனவும், உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை கட்சிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது எனவும் கோரிக்கை விடுத்து அனுப்பப்பட்ட மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க தடை விதிக்கக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தடையை நீக்கக் கோரி முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் மகனும், முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத், புகழேந்தி, கே.சி.பழனிச்சாமி உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, தேர்தல் ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டது.
தேர்தல் ஆணையம், சின்ன ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில் விசாரணையை தொடர அனுமதித்த நீதிபதிகள், மனுக்களை விசாரிக்க அதிகாரம் உள்ளதா என்பது குறித்து திருப்தியடைந்த பிறகே விசாரணையை துவங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர். மேலும், தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவு, எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.