தமிழ்நாடு

அதிமுக ஆலோசனை கூட்டம் தொடங்கியது!

அதிமுக ஆலோசனை கூட்டம் தொடங்கியது!

webteam

அதிமுக கூட்டியுள்ள எம்.பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள்‌ கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.

’’அதிமுக ஒற்றைத் தலைமையின் கீழ் செயல்பட வேண்டும், இரட்டைத் தலைமையே மக்களவை தேர்தல் தோல்விக்கு காரணம். அம்மாவால் அதிகம் அடையாளம் காட்டப்பட்டவர் தலைமை ஏற்க வேண்டும். ஆளுமைத் திறனுடைய ஒரு தலைவர் இல்லை. இதனால் கட்சியில் எல்லோருக்கும் நெருடல் இருக்கிறது’’ மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு ஆதரவாக குன்னம் எம்.எல்.ஏ ராமச்சந்திரனும் குரல் கொடுத்தார். ‘இரட்டை தலைமை இருப்பதால், தலைவர்களுக்குள் ஈகோ இருப்பதாக நினைக்கிறோம்’ என்று கூறியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று தொடங்கியது. ஒற்றைத் தலைமை தேவை என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில் நடக்கும் இந்த கூட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தக் கூட்டத்துக்கு, சட்டப்பேரவைத் தலைவர் நோட்டீஸ் அனுப்பிய ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய 3 எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இதனால் அவர்கள் பங்கேற்கவில்லை. மேலும் ராஜன் செல்லப்பாவை அடுத்து அதிமுகவில் ஒற்றைத் தலைமையை வலியுறுத்திய குன்னம் எம்.எல்.ஏ ராமச்சந்திரனும் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் பங்கேற்கவில்லை. 

இந்தக் கூட்டம் இப்போது தொடங்கி நடந்து வருகிறது. இதில் தேர்தல் ஏற்பட்ட தோல்வி உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.