தமிழ்நாடு

நாடாளுமன்ற தேர்தல்: அதிமுக - பாஜக கூட்டணி உறுதி ?

நாடாளுமன்ற தேர்தல்: அதிமுக - பாஜக கூட்டணி உறுதி ?

webteam

அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது

இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக தயாராகி வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தையிலும் அரசியல் கட்சிகள் இறங்கியுள்ளன. தமிழகத்தின் இரண்டு பெரிய பிரதான கட்சிகளாக திமுக, அதிமுக உள்ளன. திமுக- காங்கிரஸ் கூட்டணி ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. ஆனால் தொகுதிப் பங்கீடு குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. 

அதேசமயம் ஆளும் அதிமுக சிறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கப் போகிறதா..? அல்லது பாஜகவுடன் கைகோர்க்க போகிறதா..? இரண்டும் இல்லாமல் தனித்து களம் காண உள்ளதா..? என்ற கேள்வி எழுந்த நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி என அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளும் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. 

கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும் எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என தொகுதிப்பங்கீடு குறித்தே தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 20 முதல் 22 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் என்றும், தேமுதிக 4 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் கிருஷ்ணகிரி, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட தொகுதிகளை பாஜக கேட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. கூட்டணி தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளிவராத நிலையில் பிப்ரவரி 20க்குள் அதிமுக கூட்டணி குறித்த தகவல்கள் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.