தமிழ்நாடு

காவலர் தேர்வுக்கான நுழைவுச்சீட்டில் சாதி விவரம் கேட்கப்பட்டதால் சர்ச்சை!

webteam

தமிழகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில்  நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வுக்கு வழங்கப்பட்ட நுழைவுச்சீட்டில் சாதி குறித்த வகுப்பு வாரி பிரிவு விவரம் இடம் பெற்றிருந்தது. தேர்வு நுழைவுச்சீட்டில் இதுவரை இந்த விவரம் இடம் பெறாத நிலையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகளில் காலியாக உள்ள 3,552 ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் இரண்டாம் நிலைக் காவலர், சிறைக் காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் நிலை காவலர் தேர்வு, தமிழகம் முழுவதும் 295 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.40 மணி வரை இந்த தேர்வு நடைபெற்றது. தமிழ் மொழி பாடம், பொது அறிவு, உளவியல் ஆகிய பகுதிகளில் இருந்து 150 வினாக்களுக்கு தேர்வு நடைபெற்றது. தமிழ் தகுதித் தேர்வு பகுதியில் 80 வினாக்கள் இடம் பெற்றது. இதில் தகுதி பெற்றால் தான் மீதமுள்ள பொது அறிவு, உளவியல் தேர்வு மதிப்பீடு ஏற்றுக்கொள்ளப்படும்.

3 லட்சத்து 66 ஆயிரத்து 727 பேர் எழுத அனுமதிக்கப்பட்ட இந்த தேர்வில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 820 பேர் ஆர்வமுடன் பங்கேற்று தேர்வு எழுதினர். மீதமுள்ள 66 ஆயிரத்து 908 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. இந்த காவலர் தேர்வுக்கு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வர்களுக்கு தேர்வு நுழைவுச்சீட்டு இணைய வழியாக வழங்கப்பட்டது. இதனை தேர்வர்கள் இணையத்திலிருந்து பதிவிறக்கும் செய்து தேர்வு எழுதினர்.

ஆனால் இந்த தேர்வு நுழைவுச்சீட்டில் இதுவரை இல்லாத வகையில் பெயர், பிறந்த தேதி, சேர்க்கை எண் போன்ற விவரங்களுடன் சாதியை குறிப்பிடும் வகையில் வகுப்பு வாரி பிரிவு என்ற விவரம் இடம் பெற்றுள்ளது. தேர்வு நுழைவுச்சீட்டில் வகுப்பு வாரி பிரிவு என்று பி.சி., எம்.பி‌.சி, டி‌.என்.சி. போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய சர்ச்சையாக எழுந்துள்ளது. எந்த காரணத்துக்காக இது கேட்கப்பட்டது என்பது குறித்த அதிகாரபூர்வ விளக்கம் எந்த தகவலும் இன்னும் வெளிவரவில்லை. நுழைவுச்சீட்டில் எதற்காக இது கேட்கப்பட வேண்டும் என்று பலரும் கேள்வி எழுப்பிவருகின்றனர்.