தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முன்னிலையில் ஆதவ் அர்ஜுனா மற்றும் CT நிர்மல் குமார் அக்கட்சியில் இணைந்துள்ளனர். இருவருக்கும் தவெகவில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஆதவ் அர்ஜூனா விசிகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் விலகியவர். சிடி நிர்மல் குமார் அதிமுகவில் இருந்து விலகி வந்துள்ளார்.
இந்நிலையில், இருவரது இணைப்பும் தவெகவின் வளர்ச்சிக்கு எப்படி உதவும் என்பது குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சியில் மூத்த பத்திரிகையாளர்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
மூத்த பத்திரிகையாளர் ரவீந்திரன் துரைசாமி தனது கருத்தினைப் பகிர்ந்து கொண்டார்.
ஆதவ் அர்ஜுனா கட்சியை பிரபலப்படுத்துவதிலும், மாநாடுகளை நடத்துவதிலும், கட்சி தொடர்பான செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் திறமையான நபர். இதை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருக்கும்போதே நிரூபித்தவர். ஆனால், விசிகவில் இருந்து நீக்கப்பட்டவராகத்தான் தற்போது தவெகவில் இணைகிறார். விசிகவின் எண்ணவோட்டத்திற்கு எதிராக செயல்பட்டவராக நீக்கப்பட்டு வேறு கட்சியில் சேரும்போது அதற்குறிய அந்தஸ்து சற்றே குறைவுதான். அதேசமயத்தில் ஆதவ் அர்ஜுனா என்பவர் தனிப்பட்ட திறமைமிக்கவர். இதன் காரணமாக ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான நபராகத்தான் இருப்பார். தவெகவிற்கு ஆதவ் அர்ஜுனா ப்ளஸ்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
CT நிர்மல் குமார் தவெகவில் இணைகிறார் என்றால், ஆதவ் அர்ஜுனாவை ஒப்பிடுகையில் CT நிர்மல் குமார் கட்சியில் இருந்து நீக்கப்படாதவர். அதிமுகவில் இருக்கக்கூடியவர். அதிமுகவின் ஐடி விங்கில் இருந்து எடப்பாடி பழனிசாமிக்காக மிகப்பெரிய அளவில் களமாடியவர். எனவே, CT நிர்மல் குமார் தவெகவில் இணைவது கூடுதல் பலம் என்பது என் கருத்து. இதுவரை புதிய பிரமுகர்கள் தவெகவில் இணையாத சூழலில் ஆதவ் அர்ஜுனா, CT நிர்மல் குமார் போன்றவர்கள் இணைவது அக்கட்சிக்கு கூடுதல் விளம்பரத்தையும், பலத்தையும் கொடுக்கும் என்பது என் கருத்து” என்றார்.
தவெகவில் CT நிர்மல் குமார் மற்றும் ஆதவ் அர்ஜுனா இணைவது குறித்து மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் புதிய தலைமுறையிடம் தனது கருத்தினை பகிர்ந்து கொண்டார்.
தவெக தலைவர் விஜயுடன் ஆதவ் அர்ஜுனா தொடர்பில்தான் இருக்கிறார். அவர் இணைந்ததில் பெரிய ஆச்சரியம் இல்லை. அதிமுக ஐடி பிரிவுத் தலைவர் CT நிர்மல் குமார் இணைந்ததுதான் ஆச்சரியமாக இருக்கிறது. ஏற்கனவே, பாஜகவில் இருந்துதான் அதிமுகவிற்கு வந்தார். அதிமுகவிற்கு வந்தபின்னும் மிகத்தீவிரமாகத்தான் செயல்பட்டார். ஆனால், CT நிர்மல் குமாருக்கு என்ன மாதிரியான பிரச்னைகள் இருந்தது எனத் தெரியவில்லை. ஐடி பிரிவில் நிர்மல் குமாருக்கு மேலே சிலரைக் கட்சி நியமித்தது. அதன் காரணமாக நிர்மல் குமார் வேலைக்கு ஏதாவது இடையூறுகள் ஏற்பட்டதா எனவும் தெரியவில்லை. ஏனென்றால், கொள்கை அடிப்படையிலான விஷயத்தில் அதிமுகவில் இருந்து விலகி தவெகவிற்கு நிர்மல் குமார் சென்றுள்ளாரா எனத் தெரியவில்லை. அதிமுகவில் எதிர்காலம் சரியாக இருக்காது என நினைத்து நிர்மல் குமார் தவெகவிற்கு சென்றிருக்கலாம். அப்படி இல்லையெனில், விஜய் கூட தவெகவின் தொழில்நுட்பப் பிரிவை பலப்படுத்துவதற்காக அழைத்திருக்கலாம். மொத்தத்தில் நிர்மல் குமார் செல்வது தவெகவிற்கு பலமான விஷயம்தான்.
ஆதவ் என்ன விசிகவில் மிகப்பெரிய தலைவராக இருந்தாரா? விசிக 1999ல் இருந்து தேர்தல் அரசியலில் இருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியை திருமாவளவன் தனது ரத்தத்தையும் வேர்வையையும் சிந்தி வளர்த்து வைத்திருக்கிறார். விசிகவிற்கு தமிழ்நாடு முழுவதும் தொண்டர்கள் இருக்கிறார்கள். விசிகவில் அதன் கொள்கைகளை சார்ந்தும், திருமாவளவனை சார்ந்தும்தான் தொண்டர்கள் இருக்கிறார்கள். ஆதவ் அர்ஜுனாவிற்கு தனிப்பட்ட முறையில் விசிகவிற்கு ஆட்களைத் திரட்டுவதற்கான வாய்ப்புகளே இல்லை. விசிகவில் இருப்பவர்கள் எல்லாம் திருமாவின் தொண்டர்கள்தான். ஆதவ் அர்ஜுனா கட்சிக்குள் வந்ததற்குப்பின்னும், வெளியேறியதற்குப் பின்னும் சதி இருக்கிறது என திருமாவளவனே சொல்லிவிட்டார். ஆதவ் அர்ஜுனா தவெகவிற்கு செல்வதால் விசிகவிற்கு எந்த பாதிப்பும் கிடையாது.
நிர்மல் குமார் தவெகவில் இணைந்தது அவருக்கான எதிர்காலத்தினை முன்வைத்துதான்.
அதிமுகவிற்கு தற்போது இருவிதமான வாய்ப்புகள்தான் இருக்கிறது. ஒன்று தவெக உடன் கூட்டணி, அடுத்தது பாஜக உடனான கூட்டணி. விஜய்யின் வாக்குவங்கி எவ்வளவு என்று தெரியாத நிலையில் அவரை நம்பி களமிறங்குவது கடினமான ஒன்று. ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என விஜய் சொல்லும்போது அதை அதிமுக டீல் செய்வதில் சிக்கல் ஏற்படும். அடிப்படையில் அதிமுகவிற்கும் தவெகவிற்கும் இடையில் கூட்டணி உருவாவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு.
இதில் தவறொன்றும் இல்லை. இதில் ஆபத்து ஒன்றும் இருக்கிறது. பல்வேறு கட்சிகளில் ஓரம்கட்டப்பட்ட, ஒதுக்கப்பட்ட ஆட்களைச் சேர்த்தால் அவர்கள் எல்லாம் எழுச்சியுடன் எப்படி வேலை செய்வார்கள் என்பது தெரியாது. அதேசமயம் இளைஞர்களாக இருப்பவர்கள், எதிர்கால வாய்ப்பிற்காக தயாராக இருப்பவர்களை கட்சிக்குள் இணைக்கும்போது, கட்சியின் வளர்ச்சிக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆதவ் அர்ஜுனா மீது விமர்சனங்கள் இருந்தாலும், அவர் உழைப்பதற்கு தயாரான நபராகத்தான் இருக்கிறார். அதுபோல்தான், நிர்மல் குமாரும். எனவே இவர்களைப் போன்றவர்களை விஜய் சேர்ப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால், இவர்களை எல்லாம் சேர்த்தப்பின் விஜய் கட்சியை எப்படி வழிநடத்துகிறார் என்பதுதான் மிக முக்கியமான விஷயம்” என்றார்.