மடப்புரத்தைச் சேர்ந்த கோவில் காவலாளி அஜித் குமார், நகை திருட்டு வழக்கு தொடர்பாக தனிப்படை காவலர்களால் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு, கடந்த ஜூன் 28ம் தேதி அடித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம், தமிழகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த கோர சம்பவத்திற்குப் பிறகு, தமிழக அரசு அஜித் குமாரின் குடும்பத்திற்கு முதற்கட்டமாக ரூ.7.5 லட்சம் நிதி உதவியும், 3 சென்ட் வீட்டு நிலமும் வழங்கியது. மேலும், அவரது தம்பியான நவீன் குமாருக்கு, காரைக்குடி ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பும் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த நிவாரண உதவி போதாது என்று கருதி, அஜித் குமார் தரப்பைச் சேர்ந்தோர் சென்னை கிளை மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கின் விசாரணையில், கடந்த ஜூலை 22-ஆம் தேதி, நீதிபதி இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சம் தொகையை மூன்று வாரத்துக்குள் வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து நேற்று நீதிமன்ற உத்தரவின் பேரில் அஜித்குமார் குடும்பத்திற்கு கூடுதல் நிவாரணத் தொகையை வழங்கப்பட்டது. நிவாரணத்தொகையை அமைச்சர் பெரிய கருப்பன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி மற்றும் மாவட்ட ஆட்சியர் பொற்கொடி ஆகியோர் நேரில் அஜித் குமார் குடும்பத்தை சந்தித்து, ரூ.25 லட்சம் பணத்தை காசோலையாக வழங்கினர்.
அமைச்சர் நிவாரணத்தை வழங்கும்பொழுது அஜித்குமாரின் அம்மா மாலதி கண்ணீர் விட்டு கலங்கியது அனைவரையும் நெகழ்ச்சிக்கு உள்ளாகியது.
அஜித் குமார் குடும்பத்திற்கு தற்போது வரை கொடுக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகையை பொறுத்தவரையில், இதற்கு முன்பு ரூ.7.5 லட்சத்தையும் சேர்த்து, தமிழக அரசு தற்போது வரை அஜித் குமார் குடும்பத்துக்கு மொத்தமாக ரூ.32.5 லட்சம் நிவாரணமாக வழங்கியுள்ளது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், அஜித் குமார் வழக்கு குறித்து பலரும் வழக்கு கொடுத்துள்ளார்கள், அரசு இந்த வழக்கை மிக நேர்மையாக விசாரித்து வருகிறது. இந்த இழப்பை ஈடு செய்ய முடியாது.
நீதிமன்ற உத்தரவுன்படி அவருக்கு 25 லட்ச ரூபாய் நிவாரணமாக வழங்கினோம் . மேலும் நவீன் குமார் எங்கு வேலை கேட்கிறாரோ அவருக்கு அங்கே வேலை வழங்கப்படும். அவருக்கு 32,000 சம்பளத்தில் ஆவினில் வேலை கொடுத்தும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். கோயிலில் வேலை கொடுத்தும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அவர் வேலையைப் பற்றி முதலில் சரியான முடிவு எடுக்கட்டும். அதற்கு பின்பு அவருக்கு வேலையை கொடுப்போம் என்று கூறினார்