தமிழ்நாடு

இனி இந்த காரணங்களுக்கும் இ-பாஸ் பெறலாம் : மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

webteam

இபாஸ் பெறுவதற்கு புதிதாக வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியின் அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட அயனாவத்தில் கொரோனா குறித்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகும் சதவிகிதம் 87.05% ஆக உள்ளது. இதற்கு தினசரி அடிப்படையில் பரிசோதனைகளை அதிகரித்தது முக்கிய பங்கு வகித்துள்ளது.

இறப்பு விகிதத்தை குறைப்பதை நோக்கி கவனம் இருக்க வேண்டுமென்ற முதல்வரின் அறிவுறுத்தல்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். கொரோனா பரவலை பொருத்தவரை வட மண்டலங்களில் சமநிலை அடைந்துள்ளது. தென் மண்டலங்களில் சமநிலை அடைய தொடங்கியுள்ளது.

மத்திய மண்டலங்களிலும் சமநிலை அடையச் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ஆரம்பகட்டத்தை விட பின் நாட்களில் குறைவதற்கு மக்களின் ஒத்துழைப்பே காரணம். சென்னை மாநகராட்சியின் இந்த களப்பணிகள் அனைத்தும் குறைந்தபட்சம் 3 அல்லது 4 மாதங்கங்களுக்கு தொடரும்.

இ.பாஸ் பெறுவதற்கு வழக்கமான மூன்று காரணங்கள் இல்லாமல் பணி/வியாபாரம் தொடர்பாக புதிய பகுதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முன்னர் வழங்கிய பாஸ்களை விட 35% பாஸ்கள் கூடுதலாக வழங்கிவருகிறோம். இன்றைய நிலையில் 24 தனிமைபடுத்தப்பட்ட பகுதிகள் மட்டுமே சென்னை மாநகராட்சியில் உள்ளது. வீட்டு தனிமைபடுத்துதலில் 16 லட்சம் பேர் இதுவரை இருந்தார்கள்.

அவர்களில் 12 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 4 லட்சம் பேர் மட்டுமே வீட்டு தனிமைப்படுத்ததில் உள்ளார்கள். பொது போக்குவரத்து அரசின் உயர் மட்ட அளவிளான குழுவினர், மருத்துவர்கள், கல்வியாளர்கள் ஆகியோரிடம் ஆலோசித்துதான் முடிவெடுக்க முடியும். அதற்கான ஆலோசனைகளை அரசு நடத்தி வருகிறது. கொரோனா தடுப்பு பணியில் என்.ஜி.ஓ-க்களுடன் இணைந்ததற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. இந்த நடைமுறை அடுத்த மாதம் வரை கடைபிடிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.