நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த புகார் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை பற்றி பேசி சர்ச்சையை கிளப்பி வருகிறார். இந்த நிலையில் கடந்த ஞாயிறன்றும் வீடியோ ஒன்றில் சீமான் மீது காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க போவதாக தெரிவித்து இருந்தார்.
அதன்படி, நேற்று நடிகை விஜயலட்சுமி தனது சகோதரியுடன் சென்னை காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து கட்சி மேடைகளில் தன்னை பற்றி அவதூறாக பேசி வருவதாக குற்றம்சாட்டியிருந்தார். இதனால் தான் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு காரணமாக இருக்கக்கூடிய சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகாரை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமியிடம் காவல் ஆணையர் அலுவலகத்தினர் கொடுத்துள்ளனர். சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அளித்துள்ள இந்தப் புகார் குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.