தமிழ்நாடு

“குடும்ப பிரச்னையில் காவல்துறை மிரட்டுவதா?”- நடிகை வனிதா புகார்

“குடும்ப பிரச்னையில் காவல்துறை மிரட்டுவதா?”- நடிகை வனிதா புகார்

Rasus

குடும்ப பிரச்னையில் காவல்துறை தலையிட்டு தன்னை மிரட்டுவதாக நடிகை வனிதா விஜயகுமார் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏகே விஸ்வநாதனிடம் புகார் அளித்துள்ளார்.

சென்னை வேப்பேரியில் உள்ள பெருநகர காவல்துறை ஆணையர் அலுலவகத்திற்கு இன்று வந்த நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா, தனது குடும்ப பிரச்னையில் காவல்துறையினர் தலையிடுவதாக காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை வனிதா விஜயகுமார்,

“சென்னை மாதவரத்தில் எனது தாயார் பெயரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறேன். இந்த வீட்டின் சொத்தை அபகரிக்க எனது தந்தை விஜயகுமார் முயற்சித்து வருகிறார். என் தந்தை விஜயகுமாரால் என் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பாதுகாப்பு வழங்க ஆணை பெற்றுள்ளேன். இப்படி எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறையினர் இன்று காலை 9 மணியளவில் என் வீட்டிற்குள் நுழைந்து என்னை கைது செய்வதாக கூறி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

குடும்ப பிரச்னை நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் காவல்துறையினர் இந்த விஷயத்தில் தலையிடக் கூடாது. காவல்துறையினரின் செயலால் நான் பயந்த நிலையில் இருக்கிறேன். எனவே இன்று மாலை முதலமைச்சரை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்று முயற்சி செய்தேன். 

பின்னர் அவரது உதவியாளரை சந்தித்து எனது நிலைமையை எடுத்துக் கூறி முதலமைச்சர் உத்தரவின் பேரில் தற்போது சென்னை  மாநகர காவல்துறை ஆணையர் ஏகே விஸ்வநாதனை சந்தித்து எனது புகார் மனுவை அளித்துள்ளேன். இனிமேல் காவல்துறையினரால் எனக்கு எந்தத் தொந்தரவும் இருக்கக்கூடாது எனக் கேட்டுக்கொண்டேன். காவல்துறையினர் இந்த விவகாரத்தில் தலையிட மாட்டார்கள் எனக் காவல் ஆணையர் என்னிடம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்” எனக் கூறினார்.