தமிழ்நாடு

பெண்ணை மரியாதை குறைவாக நடத்துவது தான் தமிழ் கலாசாரமா?: நடிகை திரிஷா ஆவேசம்

பெண்ணை மரியாதை குறைவாக நடத்துவது தான் தமிழ் கலாசாரமா?: நடிகை திரிஷா ஆவேசம்

Rasus

ஒரு பெண்ணையும் அவர்களது குடும்பத்தையும் மரியாதை குறைவாக நடத்துவது தான் தமிழ் கலாசாரமா? எனவும், ஜல்லிக்கட்டுக்கு எதிராக தான் ஒருபோதும் பேசியதில்லை எனவும் நடிகை திரிஷா தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் ஜல்லிக்கட்டுக்கு எதிரான பீட்டா அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து வருவதாக கூறி, சிவகங்கையில் தமிழ் அமைப்பினர் திரிஷாவை கண்டித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திரிஷாவுக்கு எதிராக சமூக வலைத்தளங்களிலும் மீம்ஸ்-களும் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக தான் ஒருபோதும் பேசியதில்லை என நடிகை திரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தன்னை சித்தரித்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள மீம்ஸ்-களுக்கும் அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஒரு பெண்ணையும், அவர்களது குடும்பத்தையும் மரியாதை குறைவாக நடத்துவது தான் தமிழ் கலாசாரமா? என்றும் திரிஷா கேள்வி எழுப்பியுள்ளார். சமூகவலைத்தளங்களில் பரப்பப்படும் செயல்களுக்காக தான் ஒருபோதும் பயப்படப் போவதில்லை என்றும் த்ரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.