actress shobana
actress shobana pt web
தமிழ்நாடு

”இன்ஸ்டாகிராமால் பரத கலையை தவறான முறையில் கொண்டு சேர்த்து விடுவார்களோ..” - நடிகை ஷோபனா கவலை

PT WEB

இசை மற்றும் நடனம், மிருதங்கம், வாய்ப்பாட்டு, இலக்கியம் என பல்வேறு துறை சார்ந்த மூத்த அறிஞர்கள் பங்கேற்கும் ஒரு நாள் பன்னாட்டு கருத்தரங்கம் திருச்சி கலை காவிரி நுண்கலை கல்லூரியில் இன்று நடைபெற்றது.

இந்தியா, இலங்கை மற்றும் லண்டனில் இருந்து ஆய்வு அறிஞர்கள் இந்த கருத்தரங்கில் பங்கேற்றனர். மேலும் ஆன்லைன் வாயிலாக கனடா, சிங்கப்பூர் என 10 நாடுகளைச் சேர்ந்த ஆய்வு அறிஞர்களும் பங்கேற்றுள்ளனர்.

டிஜிட்டல் யுகத்தில் மூழ்கியுள்ள இளைய தலைமுறையினருக்கு தமிழகத்தின் பாரம்பரிய, பண்பாட்டு கலைகளை கொண்டு சேர்க்கும் விதமாக, இந்த ஒரு நாள் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக சிறந்த பரதநாட்டிய இசைக் கலைஞரும், நடிகையுமான பத்மஸ்ரீ ஷோபனா பங்கேற்று உரையாற்றினார்.

ஷோபனா பேசுகையில், ”ஆர்வமுள்ள பாடத்தில் நாம் பயின்றால் அதில் சிறந்த தேர்ச்சியை பெறலாம். ஒவ்வொரு கலைஞர்களும் தனித்துவமானவர்கள், எல்லாருக்கும் கலைகள் எளிதில் வந்துவிடாது. கலைகள் தான் உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. நீங்கள் கலைகளை தேர்ந்தெடுக்கவில்லை. எனவே, முறையாக கலைகளை ஆர்வமுடன் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.

மேலும், “இன்ஸ்டாகிராமை பயன்படுத்தும் பரதநாட்டிய கலைஞர்கள் பலரும் பரத கலையையும், முத்திரைகளையும் முறையாகக் கொண்டு சேர்ப்பதில்லை. பரத கலையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுவதால் வருங்கால தலைமுறையினருக்கு பரதகலையை தவறான முறையில் கொண்டு சேர்த்து விடுவார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

மிருதங்க வித்வான் என்பது நாட்டியம் நடனம், இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று தேர்ந்த பிறகு வித்வானாக முடியும், ஒரு நடனத்துக்கு மட்டுமே வாசிப்பேன் என கூறக்கூடாது.

ஆர்ட்டிஸ்டுகள் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி எனப்படும் ஆராய்ச்சி துறையை தேர்வு செய்யும்போது அவர்களுக்கு சுதந்திரமாக வாய்ப்பு அளிக்க வேண்டும். சங்கீதம் மாறவில்லை. ஆனால் பரதநாட்டியம் தற்போது மாறுகிறது எதனால் என்று தெரியவில்லை என்றார். அதே நேரம் மேடையில் ஜதி இசைத்து இசை பயிலும் மாணவிகளை உற்சாகப்படுத்தினார்.