செய்தியாளர்: முருகேசன்
சில வாரங்களுக்கு முன்னர் தெலுங்கு மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி பேசியவை சர்ச்சையானதில், அவர் கைது செய்யப்பட்டிருந்தார். பின் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதன்பின் தற்போது புதிய தலைமுறைக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர்,
“நான் தலைமறைவாக இருந்தபோது கைது செய்யப்பட்டேன் என்ற செய்தி உண்மையல்ல. ஏனென்றால் நான் கடந்த நான்கு வருடங்களாக ஐதராபாத்தில்தான் வசித்து வருகிறேன். அங்குதான் என் வீடு உள்ளது. ஐதராபாத்தான் என்னுடைய புகுந்த வீடு. எனது மகன் அங்குதான் படித்து வருகிறார். அப்படி இருக்கையில் நான் ஏன் அங்கு தலைமறைவாக இருக்க வேண்டும்?
கடந்த 17ஆம் தேதி என்னை கைது செய்தார்கள். நான் அன்றைக்கு படப்பிடிப்பில் ஆறு மணி வரை இருந்தேன். எனவே அதை எப்படி தலைமறைவாக இருந்தேன் என்று கூற முடியும்? நான் தவறு செய்து ஒளிந்து கொண்டிருந்தேன் என்ற பிம்பம் சிலருக்கு தேவைப்பட்டதோ என்னவோ... அப்படியே உருவாக்கி விட்டார்கள். நான் குடியிருக்கும் அடுக்குமாடியில் 800 வீடுகள் உள்ளன. அங்குதான் குடியிருக்கிறேன். தெலுங்கு பேசும் மக்கள் என்னுடன் அன்பாகத்தான் உள்ளனர்.
‘ஒரு தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கி இருந்தார்; திருமணமே ஆகாத கஸ்தூரிக்கு எப்படி குழந்தை?’ என்றெல்லாம் போலீசார் விசாரணை நடத்துவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியதை வருத்தத்துடன் கண்டிக்கிறேன். காவல்துறையினர் என்னை நன்றாக நடத்தினார்கள். எந்த குறையும் வைக்கவில்லை. அவர்களை கேவலப்படுத்துவது போன்ற செய்தியை பரப்புகிறார்கள். என்னை பிடிக்கவில்லை என்றால் என்னை பற்றி சொல்லுங்கள். என்னை குறிப்பிட்டு, காவல்துறையை திட்டுவது என்ன கணக்கு என்று எனக்கு தெரியவில்லை.
சிலர் ‘கஸ்தூரி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மட்டும் எப்படி குழந்தையை விட்டுவிட்டு சென்றார்?’ எனக் கேட்கின்றனர். பிக்பாஸில் நான் போவதற்கு முன்பு என்னுடைய அத்தை, மாமா, குழந்தைகள் என்று எல்லோரும் என்னை பார்த்தார்கள். அது ஒரு ரியாலிட்டி ஷோ. ரியாலிட்டி கிடையாது. பிக்பாஸ் ஷோவில்கூட எனக்கு சிறை தண்டனை கிடைத்து. ஆம், அப்படி அந்த போட்டியில் நான் இரண்டு நாட்கள் சிறையில் இருந்தேன். ஆனால் அங்கு எமர்ஜென்சி என்றால் நமக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. ஆகவே அதனை இந்த சிறையோடு ஒப்பிட முடியாது.
பிக்பாஸ் சிறையில் இருந்தபோது அறிவை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு கிடைக்காது. ஆனால் தற்போது கைதாகி சிறையில் இருந்தபோது, நான் நிறைய புத்தகங்கள் படித்தேன். படிக்க ஊக்குவித்தார்கள். நூலகத்தில் நிறைய புத்தகங்கள் இருந்தன. சிறையில் மிகவும் சத்தான உணவு கிடைத்தது. புரதச்சத்து, புரோட்டின், வைட்டமின்ஸ் உள்ள சத்தான உணவு எல்லோருக்கும் ஒரே மாதிரி கொடுத்தனர். அன்பான ட்ரீட்மென்ட்டை சிறை அதிகாரிகள் கொடுத்தார்கள். நான் தனியாகத்தான் சிறையில் இருந்தேன்.
ட்விட்டர் இல்லையே என்று அழுகக்கூடிய ஆள் நான். என்னால் எப்படி தனியாக இருந்திருக்க முடியும்? அப்படியான எனக்கு, புத்தகங்கள்தான் துணையாக இருந்தன. நிறைய படித்தேன். எனவே சிறைச்சாலை என்பதை ஒரு ஆக்கப்பூர்வமான இடமாகத்தான் நினைக்கிறேன். பிக்பாஸில் புரணி பேசிக்கொண்டு ஒருத்தரை ஒருத்தர் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தோம். இந்த சிறையில் நிறைய அன்பு நிறைய அனுபவம் கிடிஅத்துள்ளது. நிறைய அப்பாவிகளை நான் சந்தித்தேன்.
எனக்கு செல்போன் இல்லாமல் இருந்ததுதான் மிகப்பெரிய தண்டனையாக இருந்தது. நாட்டு நடப்புகூட தெரியவில்லை. என்னால் எதுவும் பேச முடியவில்லை. என்னுடைய வழக்கறிஞர்கள் செல்போன் இல்லாமல் இருப்பதுதான் பெட்டர் என்று கூறினார்கள்.
என்னுடைய வாகன ஓட்டுனர் கூட கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்தான். நாங்கள் காரில் வரும்போது கூட இசைவாணி பாடிய பாட்டு குறித்து பேசி வந்தோம். இசைவாணி பாடலை யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஒரு மதத்தின் நம்பிக்கையை மற்றவர்கள் கொச்சைப்படுத்துவது சரியல்ல. ஒருவரின் நம்பிக்கை என்பது, உண்மையா பொய்யா என்பதை இரண்டாம் பட்சம். முதலில் அதை மதிக்க வேண்டும்.
யாருடைய தூண்டுதலின்பெயரில் இவர்கள் இப்படி பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. ‘இசைவாணி மீது ஏன் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று என்னிடம் கேட்கிறீர்கள். ஆனால் காவல்துறை என் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே இது குறித்து என்னால் பேச முடியாது. நிபந்தனையில் இருந்து விலக்கு கோரிய என்னுடைய மனு மீதான விசாரணை வரும் திங்கட்கிழமை வருகிறது. எனவே நான் அதுவரை பேச விரும்பவில்லை” என்றார்.