தமிழ்நாடு

கட்டிடம் கட்ட நடிகர் சங்கத்துக்கு தடை

webteam

நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு இடைக்கால தடைவிதித்து, சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

சென்னை தி.நகரில் நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்ட மார்ச் 31 ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தக் கட்டிடம் கட்டப்பட உள்ள இடத்தில், 33 அடி சாலைப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அண்ணாமலை, ஸ்ரீரங்கன் ஆகியோர் இணைந்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்பாக சென்னை மாநகராட்சி, நடிகர் சங்கம், நடிகர் சங்க அறக்கட்டளை ஆகியோருக்கு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியது. மேலும், ’இந்த வழக்கு தொடர்பாக முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். கட்டிடத்தை ஆய்வு செய்யாமல் எப்படி மாநகராட்சி அனுமதி கொடுத்தது? சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்ட வேண்டிய அவசியம் என்ன?’ என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பி இருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று காலை வந்தது. விசாரித்த நீதிமன்றம், சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய, ஆணையரை நியமித்து உத்தரவிட்டது. அவர் அறிக்கைத் தாக்கல் செய்யும் வரை, எந்த வித கட்டிட வேலைகளும் அங்கு நடக்கக் கூடாது என உத்தரவிட்ட நீதிமன்றம் விசாரணையை ஜூன் 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.