நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாள், அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்படதற்காக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் நடிகர் சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு வழங்கிய மரியாதையை மேலும் கௌரவப்படுத்தும் விதமாக அவரது பிறந்தநாளை அரசு விழாவாக தமிழக முதலமைச்சர் அறிவித்தார். இதற்காக நடிகர் சங்க தலைவர் நாசர், துணை தலைவர் பொன்வண்ணன், நடிகர்கள் கோவை சரளா, பசுபதி உள்ளிட்டோர் இன்று முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இச்சந்திப்பில் செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உடனிருந்தார்.
அதன்பின் பேட்டியளித்த பொன்வண்ணன், அரசு பொருட்காட்சியில் அரசு திட்டங்களை விளக்கும் நாடக கூட்டங்களில் நடிக்கும் நாடக கலைஞர்களின் ஊதியத்தை 2 மடங்கு உயர்த்தியதற்கு நன்றி தெரிவித்துள்ளதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “ 5 கோரிக்கைகளை தமிழக முதல்வரிடம் முன் வைத்தோம். இதில் தமிழக திரைத்துறை நூற்றாண்டை கடந்துள்ள அதே வேளையில், பல கலைஞர்களும் நூற்றாண்டை கடந்துள்ளனர். இவர்களை கௌரவப்படுத்தும் வகையில் அவர்களது குடும்பத்தினருக்கு உதவித்தொகை வழங்க வேண்டும். நாடகத்துறையில் பல கலைஞர்கள் வருமையில் உள்ளதால் அவர்களுக்கு அரசு பேருந்தில் இலவசமாக பயணிக்கவும், உதவித்தொகை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார்.