தமிழ்நாடு

''பேனர் விவகாரம் சினிமாவுக்கும் பொருந்தும்'' - நடிகர் விவேக்

''பேனர் விவகாரம் சினிமாவுக்கும் பொருந்தும்'' - நடிகர் விவேக்

webteam

இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழப்புக்கு நடிகர் விவேக் இரங்கல் தெரிவித்துள்ளார்

சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் இளம்பெண் சுபஸ்ரீ நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி, சுபஸ்ரீ மீது மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த விபத்து தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பலரும் பேனர் கலாசாரத்துக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். கட்சியினர் யாரும் பேனர்கள் வைக்க வேண்டாம் என அதிமுக, திமுக கட்சிகள் அறிவுறுத்தியுள்ளன. 

இந்நிலையில் சுபஸ்ரீ உயிரிழப்புக்கு நடிகர் விவேக் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''எங்கு பார்த்தாலும் போஸ்டர் ஒட்டுவதை 'காதல் சடுகுடு' படத்தில் நான் ஏற்கெனவே கண்டித்துள்ளேன். சுபஸ்ரீயின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்வு மிகவும் வருந்தத்தக்கது. துரதிர்ஷ்டவசமானது. கண்ட இடங்களில் பேனர், போஸ்டர் வைப்பது முறைப்படுத்தப் பட வேண்டும். இது சினிமாவுக்கும் பொருந்தும்'' என குறிப்பிட்டுள்ளார்.