தமிழ்நாடு

கருணாநிதி நினைவிடத்தில் விஜய் அஞ்சலி

கருணாநிதி நினைவிடத்தில் விஜய் அஞ்சலி

Rasus

திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் நடிகர் விஜய் அதிகாலை அஞ்சலி செலுத்தினார்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் கடந்த 7-ஆம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. தொடர்ச்சியாக கருணாநிதி நினைவிடம் அருகே நாள்தோறும் ஏராளமான திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனால் அந்த இடத்தில் எப்போதும் அதிக அளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் நடிகர் விஜய் இன்று அதிகாலை அஞ்சலி செலுத்தினார். கருணாநிதி காலமான நேரத்தில் விஜய் அமெரிக்கா சென்றிருந்தார். எனவே கருணாநிதிக்கு அவர் இறுதி அஞ்சலி செலுத்தவில்லை. இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய விஜய், நேரடியாக கருணாநிதி நினைவிடம் சென்று கருணாநிதிக்கு தனது அஞ்சலி செலுத்தினார். அவரது நினைவிடம் அருகே மலர் வளையம் வைத்து மரியாதையும் செய்தார். முன்னதாக காவேரி மருத்துவமனையில் கருணாநிதி சிகிச்சை பெற்று வந்தபோது நடிகர் விஜய் நேரில் சந்தித்து நலம் விசாரித்திருந்தார்.