அரியலூரை சேர்ந்த மாணவி மருத்துவப் படிப்பை தொடர கட்டணமில்லதா காரணத்தால் வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் விஜய் ரசிகர்கள் மாணவிக்கு பணம் கொடுத்ததாக நடிகர் விஜயையே ஏமாற்றியது தற்போது தெரியவந்துள்ளது.
அரியலூர் மாவட்டம் பூவிருந்தன்குடி கிராமத்தை சேர்ந்த மாணவி ரங்கீலா. இவர் கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 1058 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இதையடுத்து கலந்தாய்வு மூலம் கன்னியாகுமரியில் உள்ள தனியார் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த அவருக்கு, முதலாமாண்டு கல்விக்கட்டணம் மட்டுமே செலுத்த முடிந்தது.
இந்நிலையில் அரியலூர் மாவட்ட விஜய் ரசிகர் மன்றத்தினர், ரங்கீலாவின் இரண்டாம் ஆண்டு கல்விக்கட்டணத்தை ஏற்பதாக உறுதியளித்துள்ளனர். அதனை நம்பி ரங்கீலாவும் இரண்டாம் ஆண்டு வகுப்பிற்குச் சென்றுள்ளார். ஆனால் அளித்த வாக்குறுதிப்படி விஜய் ரசிகர் மன்றத்தினர் உதவி செய்யாததால், கல்லூரி நிர்வாகம் ரங்கீலாவை வீட்டிற்கு அனுப்பியுள்ளது. இதனிடையே மாணவி ரங்கீலாவிற்கு உதவாமலேயே அவருக்கு உதவியதுபோல் புகைப்படங்கள் எடுத்த விஜய் ரசிகர்கள், அந்த புகைப்படத்தை நடிகர் விஜய்க்கும் அனுப்பி ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது. மறைந்த மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு நிதியுதவி மற்றும் எந்த உதவி வேண்டுமானாலும் செய்யத் தயார் என்று கூறிய நடிகர் விஜய், மாணவி ரங்கீலாவின் படிப்பிற்கு உதவி செய்தால் அவரது மருத்துவபடிப்பு தொடரும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.