MGR - Vijay PT Web
தமிழ்நாடு

“கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து...” - எம்.ஜி.ஆர் பிறந்தாளுக்கு வாழ்த்து தெரிவித்த விஜய்!

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள்.

ஜெனிட்டா ரோஸ்லின்

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாளையொட்டி, இன்று சென்னை - கிண்டியில் உள்ள அவரது உருவப்படத்துக்கு தமிழக அரசு சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், எம்.ஜி.ஆர் குறித்த உயரிய விஷயங்களை பகிர்ந்துள்ளனர். அந்தவகையில்,

எம்ஜிஆரின் 108-வது பிறந்தாளுக்கு வாழ்த்து தெரிவித்திருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ”ஏழை, எளிய மக்களின் கண்ணீரைத் துடைத்த வள்ளல், அதிமுக நிறுவனத் தலைவர் 'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 108-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் இத்தருணத்தில், அவர்தம் நெடும்புகழைப் போற்றி வணங்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி

எம்ஜிஆர் பிறந்தநாளான இன்று (ஜன.17) எம்.ஜி.ஆர் பற்றிய வீடியோவை வெளியிட்டு புகழாரம் செலுத்தியுள்ளார் பிரதமர் மோடி.

அந்த வீடியோவுடன், “எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்கவும், சிறந்த சமுதாயத்தை உருவாக்கவும் அவர் மேற்கொண்ட முயற்சிகளால் நாங்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளோம்” என்று தமிழில் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய்யும் தனது வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளார்.

அதில், "அளவற்ற வறுமையைத் தாண்டினார். கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார். அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார். அவரே தமிழக அரசியலின் அதிசயம் ஆனார். இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப் பிறந்தநாள் வணக்கம்" என்று தெரிவித்துள்ளார்.