வடிவேலு pt web
தமிழ்நாடு

“யார் எதை கற்றுக்கொள்ள வேண்டுமோ கற்றுக்கொள்ளட்டும்; கட்டாயப்படுத்த வேண்டாம்” - நடிகர் வடிவேலு

விமர்சனங்கள் என்ற பெயரில் எவ்வளவோ எலிகள் வருகிறது அவற்றையெல்லாம் சிக்ஸர்கள் அடிப்பது போல முதல்வர் அடிப்பதாக நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.

PT WEB

முதல்வரின் பிறந்த நாளை ஒட்டி திமுக சார்பில் சென்னை யானை கவுனியில் ‘மக்கள் முதல்வரின் மனிதநேய விழா’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, நடிகர் வடிவேலு, நடிகர் அஜய் ரத்னம், நடிகை குட்டி பத்மினி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

நிகழ்வின் மேடையில் பேசிய நடிகர் வடிவேலு, “தமிழ்நாடு முதலமைச்சரால் பயனடையாத மக்களே கிடையாது. விமர்சனங்கள் என்ற பெயரில் எவ்வளவோ எலிகள் வருகிறது. ஆனால், அவை எல்லாவற்றையும் சிக்ஸர்கள் அடிப்பது போல முதல்வர் அடித்து வருகிறார்.

தமிழ்நாடு முதல்வர் இல்லை என்றால் தமிழே இன்று இருந்திருக்காது. காக்கா, கிளி, மாடு எல்லாம் அதனுடைய தாய்மொழியில் கத்துகின்றன. அவற்றையெல்லாம் மாறி மாறி கத்த சொன்னால் கத்துமா? அது வேண்டாம். யார் யார் எதை கற்றுக் கொள்ள வேண்டுமோ கற்றுக்கொள்ளட்டும், எதையும் கட்டாயப்படுத்த வேண்டாம்.

நாட்டிற்கு ஏதேதோ அடையாளமாக உள்ளது, எங்களுடைய தமிழ்நாட்டிற்கு தமிழ் தான் அடையாளம். ஐயாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ் மொழி, முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பார்வையில் உள்ளது. எங்கள் தமிழ்மொழி உலகுக்கு எல்லாம் கற்றுத் தரும் மொழி. ஆங்கிலம் வெறும் கனெக்டட் மொழிதான்.

சின்ன சின்ன வார்த்தைக்கு அர்த்தமுள்ள தங்கமான மொழி தமிழ் மொழி. நான் அரசியல் பேசவில்லை என்னுடைய மொழியை பற்றி தான் பேசுகிறேன். இது திமுக மேடை மட்டுமல்ல, தமிழனின் மேடை, தமிழ்நாட்டின் மேடை ஆகும். முதல்வர் இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கும், தமிழ் மொழிக்கும் எந்த பாதிப்பும் வராது. முதல்வர் ஒவ்வொரு வீட்டுக்கும் மூத்த தகப்பன். முதல்வருக்கு தூக்கமே கிடையாது, இரண்டு மணி நேரங்கள் மட்டுமே ஒரு நாளைக்கு தூங்குகிறார், எந்நேரமும் பணியில் தான் உள்ளார்” எனத் தெரிவித்தார்.

பின் பொதுமக்கள் வடிவேலுவிடம் பாட்டு பாடும் படி கேட்டதன் பெயரில் மேடையிலேயே சத்தியமே லட்சியமாய் என்ற நீலமலைத்திருடன் பாடலை பாடிய வடிவேலு பாடினார். 2026 இல் 200 சீட்டுக்கு மேல் பெற்று திமுக ஆட்சியைப் பிடிக்கும், மீண்டும் ஸ்டாலின் முதல்வர் ஆவார் என தெரிவித்தார்.