vadivelu
vadivelu pt
தமிழ்நாடு

“இது சமாதி அல்ல.. சன்னதி..” - கலைஞருடனான நினைவை பகிர்ந்து நெகிழ்ச்சியாக பேசிய வடிவேலு!

யுவபுருஷ்

சென்னை கொளத்தூரில் உள்ள அகரம் சந்திப்பில் “மக்கள் முதல்வரின் மனிதநேய திருநாள்” எனும் தலைப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு, இயக்குநர் முத்துராமன், பட்டிமன்ற பேச்சாளர் பர்வீன் சுல்தானா, மேயர் பிரியா மற்றும் வடசென்னை எம்.பி கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் வடிவேலு, “அழைக்காத நபர்களுடைய நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் செல்கிறீர்கள், அழைக்கக்கூடிய நபருடைய நிகழ்ச்சிக்கு வருவதில்லையே என சேகர்பாபு அடிக்கடி சொல்லுவார். கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தை பார்த்தேன். அது சமாதி அல்ல.. சன்னதி. திமுக தொண்டனுக்கு அது குலதெய்வ கோவில். நான் எம்.ஜி.ஆரின் ரசிகன் என்றாலும், கலைஞரின் தீவிர பக்தன். எம்.ஜி.ஆரை வெளியில் இருந்துதான் பார்க்க முடியும். ஆனால் கலைஞரோடு அமர்ந்து பேசியுள்ளேன், அவர் வசனத்தில் நடித்துள்ளேன்.

இம்சை அரசன் 23ம் புலிகேசி பட வெளியீட்டில் பிரச்னை வரும்போது கலைஞரை சந்தித்து பேசினேன். அப்போது ‘ராஜா குதிரையில் போகக்கூடாது என்று கூறி ப்ளு கிராஸ் அமைப்பினர் படத்தை வெளியிட தடையாக இருக்கிறார்கள்' என்றேன். அதற்கு அவர் ‘ராஜா குதிரையில் போகாமல் Qualis-லேயா போவாரு?’ என்று கிண்டலடித்தபடியே ஆ.ராசாவிடம் பேசி படத்தை வெளியிட உதவி செய்தார். திராவிடம் என்ன என்று கேட்பவர்கள், ஒருமுறை கலைஞர் நினைவிடத்தை சுற்றிப்பாருங்கள். அப்போது திராவிடம் பற்றி தெரியவரும்” என்று நெகிழ்ச்சியாக பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கலைஞரின் நினைவிடத்தை தமிழக மக்கள் அனைவரும் பார்க்க வேண்டும். அவரது புகைப்படங்களை பார்க்கும் போது கடின உழைப்பு மற்றும் வரலாறு தெரிகின்றது. கலைஞரின் மணிமண்டபம், வெறும் மணிமண்டபம் மட்டும் அல்ல. அது ஒரு மகா சன்னதி” என்று கூறினார்.