ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டுப் போராடுபவர்களின் உணர்வோடு கைகோர்ப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில், அறிஞர்களும், தலைவர்களுமே உச்சரித்து வந்த பண்பாடு, அடையாளம், வரலாறு போன்ற வார்த்தைகளை இப்போது சாதாரண மக்களும் இளைஞர்களும் பேச ஜல்லிக்கட்டு காரணமாகியுள்ளதாக கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கி, பொதுப் பிரச்னைக்கு இளைஞர்கள் ஒன்றுகூடி போராடத் தூண்டியவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறியுள்ள சூர்யா, மாடுகளுக்கு எதிரானது ஜல்லிக்கட்டு என பொய் பிரசாரம் செய்து நீதிமன்றத்தில் வெற்றி பெற்ற பீட்டா, மக்கள் மன்றத்தில் தோற்றிருப்பதாகவும் சூர்யா தெரிவித்துள்ளார். அமைதி வழியில் உரிமைகளை நிலைநாட்டப் போராடுகிற அனைவரையும் பாராட்டுவதாக கூறியுள்ள சூர்யா, அவர்களது உணர்வோடு தானும் கைகோர்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மக்களின் போராட்டம் வெற்றி பெற்று ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று தெரிவித்துள்ள அவர், அதோடு வெற்றி பெற்று விட்டதாக அமைதியாகி விடாமல் தமிழரின் அடையாளத்தை அழிக்கும் முயற்சிகள் எந்த வடிவில் வந்தாலும் ஒன்றுபட்டு குரல்கொடுக்க வேண்டும் என்றும் சூர்யா வலியுறுத்தியுள்ளார்.