ஸ்ரீகாந்த் எக்ஸ் தளம்
தமிழ்நாடு

நடிகர் ஸ்ரீகாந்த் கைது | போதைப் பொருளை பயன்படுத்திய நடிகர்கள் யார் யார்? – போலீசார் விசாரணை

போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடன் சேர்ந்து கொக்கைன் போதைப் பொருளை பயன்படுத்திய நடிகர்கள் யார் யார்? என்ற பட்டியலை எடுக்கிறது காவல்துறை.

PT WEB

செய்தியாளர்: ஜெ.அன்பரசன்

கொகைன் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருடனான தொடர்பு குறித்து பல்வேறு கட்ட விசாரணைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். ஸ்ரீகாந்த் எத்தனை ஆண்டுகளாக போதைப்பொருள் பயன்படுத்தி வருகிறார்? யார் மூலம் எல்லாம் போதைப்பொருளை வாங்கியுள்ளார்? சென்னையில் எந்தெந்த பப், பார்ட்டிகளில் போதைப் பொருள் பயன்படுத்தி உள்ளார்? யாருடன் இணைந்து போதைப் பொருளை உட்கொண்டார்? என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் தங்களுடைய விசாரணையை விரிவுப்படுத்தி உள்ளனர்.

மேலும், முன்னாள் அதிமுக பிரமுகர் பிரசாத் மூலம் வாங்கிய கொக்கைன் போதைப் பொருளை நடிகர் ஸ்ரீகாந்த் யாருக்கெல்லாம் கொடுத்தார்? அதில், திரை உலகினர் எத்தனை நபர்கள்? போன்ற தகவல்களை சேகரிக்கும் பணியிலும் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். நடிகர் ஸ்ரீகாந்த்துடைய வங்கி கணக்கு பரிவர்த்தனைகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். போதைப் பொருளுக்காக பிரசாத்திற்கு எவ்வளவு பணம் அனுப்பினார்? அதே போல போதைப் பொருளுக்காக வேறு யாருக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது போன்ற விவரங்களை சேகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் கொக்கைன் போதைப்பொருளை நடிகர் கிருஷ்ணாவும் உட்கொண்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், அவர் படப்பிடிப்பு விஷயமாக கேரளாவிற்குச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. அதனால், சம்மன் கொடுத்து நேரில் வரவழைக்க போலீசார் திட்டமிட்டுருப்பதாகவும் அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.